படம் - x.com/FIDE_chess 
விளையாட்டு

உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஆன தமிழ்நாட்டின் பிரனவ்

விஸ்வநாதன் ஆனந்தின் வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடமியின் மாணவர்.

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது பிரனவ் வெங்கடேஷ், உலக ஜூனியர் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

ஓபன் பிரிவில் 12 கிராண்ட்மாஸ்டர்கள் உள்பட 63 நாடுகளில் இருந்து 157 வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில் முதலிடம் பெற்று சாம்பியன் ஆகியுள்ளார் பிரனவ். கடைசிச் சுற்றில் மேடிக் லேவரன்சிக்கிடம் டிரா செய்த பிரனவ், 11 ஆட்டங்களில் 7 வெற்றிகளுடன் 9 புள்ளிகளைப் பெற்றார். எந்தவொரு ஆட்டத்திலும் அவர் தோல்வியடையவில்லை. குகேஷ், பிரக்ஞானந்தாவைப் போல பிரனவும் சென்னை வேலம்மாள் பள்ளியில் படித்தவர். விஸ்வநாதன் ஆனந்தின் வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடமியின் மாணவர்.

இதற்கு முன்பு 1987-ல் விஸ்வநாதன் ஆனந்தும் 2004-ல் ஹரிகிருஷ்ணாவும் 2008-ல் அபிஜீத் குப்தாவும் உலக ஜூனியர் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியர்கள். ஓபன் பிரிவில் 17 வருடங்களுக்குப் பிறகு இந்தப் பட்டத்தைப் பெறும் இந்தியர் என்கிற பெருமையையும் பிரனவ் அடைந்துள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற சென்னை இண்டர்நேஷனல் போட்டியில் சேலஞ்சர்ஸ் பிரிவில் முதலிடம் பெற்றார் பிரனவ்.

இதேபோல இந்தியா மற்றும் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அரவிந்த் சிதம்பரம் (25), பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியை வென்றுள்ளார். செஸ் வாழ்க்கையில் அவர் வென்ற முதல் பெரிய போட்டி இது. இப்போட்டியில் மற்றுமொரு தமிழக வீரரான பிரக்ஞானந்தா, இருவருடன் இணைந்து 2-வது இடத்தைப் பிடித்தார்.