இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி! ANI
விளையாட்டு

சென்னை மகளிர் டெஸ்ட்: இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஜூலை 5 அன்று தொடங்குகிறது.

யோகேஷ் குமார்

தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

தென்னாப்பிரிக்க மகளிர் அணி மூன்று ஒருநாள், ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது. ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் ஜூன் 28 அன்று சென்னையில் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்திய அணி. அதிகபட்சமாக ஷெஃபாலி வர்மா 205 ரன்களும், மந்தனா 149 ரன்களும் அடித்தனர். தெ.ஆ. அணியில் டக்கர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பிறகு விளையாடிய தெ.ஆ. அணி 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக காப் 74 ரன்களும், சுனே லூஸ் 65 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஸ்நேஹ் ராணா 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஃபாலோ - ஆன் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் களமிறங்கியது தெ.ஆ. அணி. 2-வது இன்னிங்ஸில் வோல்வார்ட் (122 ரன்கள்) மற்றும் சுனே லூஸின் (109 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தால் 373 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஸ்நேஹ் ராணா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் ஒரு டெஸ்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை எனும் சாதனையைப் படைத்தார் ஸ்நேஹ் ராணா.

இதைத் தொடர்ந்து 37 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. ஷெஃபாலி வர்மா 24 ரன்களும், சுபா சதீஷ் 13 ரன்களும் எடுத்தனர்.

ஏற்கெனவே இந்திய அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஜூலை 5 அன்று தொடங்குகிறது. அனைத்து ஆட்டங்களுமே சென்னையில் நடைபெறவுள்ளது.