ஆசியக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா விளையாடக் கூடாது என இந்திய முன்னாள் வீரர் கெதார் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பைப் போட்டி இம்முறை டி20 ஆட்டங்கள் கொண்ட போட்டியாக நடைபெறுகிறது. இப்போட்டி செப்டம்பர் 9 முதல் ஆகஸ்ட் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபியில் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் குரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் குரூப் சுற்றில் செப்டம்பர் 14 அன்று மோதுகின்றன. குரூப் சுற்றுக்குப் பிறகு இரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதவுள்ளன.
சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் தகுதியடைந்தால் இரு அணிகளும் மீண்டும் செப்டம்பர் 21-ல் துபையில் மோத வாய்ப்புள்ளது. குரூப் சுற்றில் இந்திய அணி முதலிடம் பிடித்தால் சூப்பர் 4 சுற்றில் அதன் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெறும். இந்தியாவும் பாகிஸ்தானும் துபையில் நடைபெறும் இறுதிச் சுற்றுக்கும் தகுதியடைந்தால் செப்டம்பர் 28-ல் இரு அணிகளும் மூன்றாவது முறையாகவும் மோத வாய்ப்புள்ளது.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, ஒரு போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவது இதுவே முதல்முறை என்பதால், இந்த ஆட்டத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேசமயம் இந்த ஆட்டம் நடைபெறுமா என்ற கேள்வியும் சிலருக்கு இருந்துகொண்டே இருக்கிறது.
உலக சாம்பியன்ஷிப் லெஜன்ட்ஸ் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய அணி மறுப்பு தெரிவித்தது. அரையிறுதிச் சுற்றிலும் இரு அணிகளும் மோதவிருந்தன. இந்த ஆட்டத்திலும் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, இறுதிச் சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றது.
இந்நிலையில், ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா விளையாடக் கூடாது என்றும் இந்தியா விளையாடாது என்றும் இந்திய முன்னாள் வீரரும் பாஜகவைச் சேர்ந்தவருமான கெதார் ஜாதவ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "இந்திய அணி விளையாடவே கூடாது என நினைக்கிறேன். இந்தியாவைப் பொறுத்தவரை, எங்கு விளையாடினாலும் எப்போதும் வெற்றி பெறும். ஆனால், இந்த ஆட்டத்தில் விளையாடக் கூடாது. அவர்கள் விளையாட மாட்டார்கள் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்" என்றார் கெதார் ஜாதவ்.
கெதார் ஜாதவ் கடந்தாண்டு ஜூன் 3, 2024-ல் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அரசியலில் கால் பதித்த கெதார் ஜாதவ், கடந்த ஏப்ரலில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
Asia Cup T20 | Kedar Jadhav | India vs Pakistan | India v Pakistan | Ind v Pak | Ind vs Pak | India Pakistan | Operation Sindoor