பார்வையற்ற மகளிருக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி. படம்: https://x.com/narendramodi
விளையாட்டு

பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை: இந்திய மகளிர் சாம்பியன் | Blind Women’s T20 World Cup |

பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

கிழக்கு நியூஸ்

பார்வையற்ற மகளிருக்கான டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

பார்வையற்ற மகளிருக்கான டி20 உலகக் கோப்பை முதல்முறையாக நடைபெற்றது. இந்தியாவும் இலங்கையும் இணைந்து இப்போட்டியை நடத்தின. நவம்பர் 11 அன்று தொடங்கிய இப்போட்டி புதுதில்லி, பெங்களூரு, இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடைபெற்றது. இறுதிச் சுற்றானது கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஒரு தோல்வியைக்கூடச் சந்திக்காத இந்திய மகளிர் அணி, இறுதிச் சுற்றில் நேபாளத்தை எதிர்கொண்டது.

டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்திய அணி நேபாளத்தை 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. ஒட்டுமொத்த இன்னிங்ஸிலும் நேபாளம் ஒரு பவுண்டரியை மட்டுமே அடித்தது.

இலக்கை விரட்டிய இந்திய மகளிர் 12.1 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று உலகக் கோப்பையை வென்றது. இந்திய மகளிரின் இச்சாதனைக்கு நாடு முழுக்க பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

முன்னதாக லீக் சுற்றில் இலங்கை, ஆஸ்திரேலியா, நேபாளம், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியது இந்திய அணி. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. நேபாளம் அணி தனது அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

Blind Women's T20 World Cup | Indian Blind Women’s Cricket Team |