இந்தியா 255/5 (சஞ்சு சாம்சன் 89, இஷான் கிஷன் 54, அபிஷேக் சர்மா 52, நீஷம் 3-46)
நியூசிலாந்து 159 (சைஃபர்ட் 52, சான்ட்னர் 43, பும்ரா 4-15, அக்ஷர் படேல் 3-27)
பல சாதனைகளை நிகழ்த்தி 2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. இதையடுத்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன்களான தோனி, ரோஹித் சர்மா வரிசையில் சூர்யகுமார் யாதவும் இணைந்துள்ளார்.
அஹமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆச்சர்யமாக இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
தன் மீது நம்பிக்கை வைத்த இந்திய அணிக்கு கைம்மாறு செய்தார் அபிஷேக் சர்மா. ஆரம்பம் முதல் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தினார். இதனால் பவர்பிளேயில் இந்திய அணி 92 ரன்களைக் குவித்தது. டி20 உலகக் கோப்பையில் பவர்பிளேயில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களைச் சமன் செய்தது இந்திய அணி. மேறும் இறுதிச்சுற்றில் வேறு எந்த அணியும் பவர்பிளேயில் இத்தனை ரன்களைக் குவித்ததில்லை. 18 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்த அபிஷேக் சர்மா 52 ரன்களில் ரச்சின் ரவீந்திராவின் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி மூன்று ஆட்டங்களில் தன்னுடைய இன்னொரு பக்கத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் அரை சதமெடுத்தார்.
இஷான் கிஷனும் அதிரடியாக விளையாட இந்திய அணி 7.2 ஓவர்களில் 100 ரன்களைக் குவித்தது. 2-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சனும் இஷான் கிஷனும் 45 ரன்களில் 100 ரன்கள் எடுத்தார்கள். இஷான் கிஷன் 23 பந்துகளில் அரை சதமெடுத்தார். திடீரென 16-வது ஓவரில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரும் நீஷம் பந்துகளில் ஆட்டமிழந்தார்கள். சஞ்சு சாம்சன் 89 ரன்களும் இஷான் கிஷன் 54 ரன்களும் எடுத்தார்கள். கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். இதனால் இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தில் லேசாகத் தேக்கம் ஏற்பட்டது. எனினும் கடைசி இரு ஓவர்களில் வழக்கம்போல அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது இந்திய அணி. ஷிவம் துபே 8 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் எடுத்தார். நியூசி. அணியில் நீஷம் 3 விக்கெட்டுகளை எடுத்தார். டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் அதிக ரன்கள் எடுத்த அணி, ஒரு டி20 உலகக் கோப்பையில் 100 சிக்ஸர்களை அடித்த முதல் அணி எனப் பல பேட்டிங் சாதனைகளை இந்தியா படைத்தது.
இமாலய இலக்கை எதிர்கொள்ள மிகவும் தடுமாறியது நியூசிலாந்து அணி. பவர்பிளேயிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்கள் எடுத்தது. சைஃபர்ட் 23 பந்துகளில் அரை சதமெடுத்தாலும் அவருடன் இணைந்து யாராலும் நீண்ட நேரம் விளையாட முடியாததால் பெரிய தோல்வியை எதிர்கொண்டது நியூசிலாந்து அணி. 10.3 ஓவர்களில் 100 ரன்களை எடுத்தாலும் இன்னொரு பக்கம் விக்கெட்டுகளைத் தொடர்ந்து இழந்ததால் இலக்கை நெருங்க முடியாமலே போனது. மிட்செல்லும் சான்டனரும் நடுவில் நன்றாக விளையாடினாலும் பலனளிக்கவில்லை. சைஃபர்ட் 52, சான்ட்னர் 43, மிட்செல் 17 ரன்கள் எடுத்தார்கள். கடைசியில் 19 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது நியூசிலாந்து அணி. பும்ரா 4 விக்கெட்டுகளையும் அக்ஷர் படேல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். பும்ரா ஆட்ட நாயகனாகவும் சஞ்சு சாம்சன் தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள்.
96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்றது இந்திய அணி. முதல்முறையாக டி20 உலகக் கோப்பையை அடுத்தடுத்து வென்ற அணி, சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி போன்ற சாதனைகளைப் படைத்துள்ளது சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி.
India vs New Zealand T20 WC final: India wins their third T20 title by 96 runs