ANI
விளையாட்டு

டெஸ்ட்: இரண்டரை நாள்களில் வங்கதேசத்தைத் தட்டித் தூக்கிய இந்தியா!

யோகேஷ் குமார்

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இத்தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்டுகளிலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் செப். 27 அன்று கான்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக மோமினுல் ஹக் 107 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின், ஆகாஷ் தீப் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் பிறகு முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது. 34.4 ஓவர்கள் மட்டுமே விளையாடிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஜெயிஸ்வால் 72, ராகுல் 68, கோலி 47, கில் 39 ரன்கள் எடுத்தனர். வங்கதேச அணி தரப்பில் மெஹதி ஹசன், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன் பிறகு வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஷாட்மன் இஸ்லாம் 50 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் பும்ரா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணிக்கு 95 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு, ஆரம்பம் முதல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஜெயிஸ்வால். ரோஹித் சர்மா 8 ரன்களிலும், கில் 6 ரன்களிலும் வெளியேற மறுமுனையில் அசத்தலாக விளையாடிய ஜெயிஸ்வால் அரைசதம் அடித்தார்.

அவருடன் கூட்டணி அமைத்த கோலியும் வேகமாக ரன்களை சேர்த்தார். சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடிக்க முயற்சி செய்த ஜெயிஸ்வால் 51 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைத்தார் கோலி. ஆட்டமிழக்காமல் அவர் 29 ரன்கள் எடுத்தார். வங்கதேச தரப்பில் மெஹதி ஹசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இத்தொடரை 2-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறது.

முன்னதாக, இந்த டெஸ்டின் 2-வது நாள் மற்றும் 3-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், இந்த டெஸ்டில் முடிவு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், கடைசி இரு நாள்களில் இந்திய அணியின் அதிரடியான பேட்டிங் மற்றும் சிறப்பானப் பந்துவீச்சால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

ஜெயிஸ்வால் ஆட்ட நாயகனாகவும், அஸ்வின் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் டெஸ்டில் 11-வது முறையாக தொடர் நாயகன் விருதை வென்று முரளிதரன் சாதனையைச் சமன் செய்தார் அஸ்வின்.

இத்தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது இந்திய அணி.

இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அக். 6 அன்று தொடங்குகிறது.