ANI
விளையாட்டு

அக்டோபரில் ஆஸி. செல்லும் இந்திய அணி!

2026 டி20 உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில் இந்த டி20 தொடர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு நியூஸ்

2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறது.

2025-26-ம் ஆண்டுக்கான உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இந்தத் திட்டத்தின்படி, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறது.

முதலில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடுகிறது. அக்டோபர் 19 அன்று பெர்த்தில் ஒருநாள் தொடர் தொடங்குகிறது. அக்டோபர் 23-ல் அடிலெய்டில் இரண்டாவது ஒருநாள் ஆட்டமும், அக்டோபர் 25-ல் சிட்னியில் மூன்றாவது ஒருநாள் ஆட்டமும் நடைபெறுகின்றன.

இதைத் தொடர்ந்து, 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது. முதல் ஆட்டம் கான்பெராவிலும் கடைசி டி20 ஆட்டம் பிரிஸ்பேனில் நவம்பர் 8 அன்றும் நடைபெறுகின்றன.

2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. இதற்குத் தயாராகும் வகையில் இந்த டி20 தொடர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருநாள் தொடர்

  • முதல் ஒருநாள் - அக்டோபர் 19, பெர்த்

  • இரண்டாவது ஒருநாள் - அக்டோபர் 23, அடிலெய்ட்

  • மூன்றாவது ஒருநாள் - அக்டோபர் 25, சிட்னி

டி20 தொடர்

  • முதல் டி20 - அக்டோபர் 29, கான்பெரா

  • இரண்டாவது டி20 - அக்டோபர் 31, மெல்போர்ன்

  • மூன்றாவது டி20 - நவம்பர் 2, ஓவல்

  • நான்காவது டி20 - நவம்பர் 6, கோல்ட் கோஸ்ட்

  • ஐந்தாவது டி20 - நவம்பர் 8, பிரிஸ்பேன்

இந்தியாவுடனான தொடர்களுக்குப் பிறகு நவம்பர் 21, 2025 முதல் ஜனவரி 8, 2026 வரை ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது ஆஸ்திரேலியா.