89 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் ANI
விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: நூலிழையில் வென்ற இந்தியா இறுதிச்சுற்றுக்கு தகுதி!

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 253 ரன்கள் குவித்தாலும் இங்கிலாந்து அணி கடுமையாகப் போராடி சவால் அளித்தது.

கிழக்கு நியூஸ்

இந்தியா 253/7 (சஞ்சு சாம்சன் 89, ஷிவம் துபே 43, வில் ஜாக்ஸ் 2-40)

இங்கிலாந்து 246/7 (ஜகோப் பெத்தெல் 105, வில் ஜாக்ஸ் 35, பாண்டியா 2-38)

பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாகப் பறந்த டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் பரபரப்பான முறையில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு நுழைந்துள்ளது இந்திய அணி.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதியில் டாஸ் வென்ற இங்கிலாந்து, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்திலும் சஞ்சு சாம்சன் அம்சமாக விளையாடி 42 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்தார். ஷிவம் துபே 43, இஷான் கிஷன் 39, பாண்டியா 27, திலக் வர்மா 21 ரன்கள் எடுத்து பெரிய ஸ்கோர் குவிக்க உதவினார்கள். இந்திய அணி பேட்டர்கள் மொத்தமாக 19 சிக்ஸர்கள் அடித்தார்கள்.

இங்கிலாந்து அணி பவர்பிளேயில் 67 ரன்கள் எடுத்து வலுவாக ஆரம்பித்தது. எனினும் சால்ட் 5, பட்லர் 25, ஹாரி புரூக் 7, பாண்டன் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜகோப் பெத்தலும் வில் ஜாக்ஸும் ஆட்டத்தின் போக்கை மாற்றினார்கள். 8.1 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்த இங்கிலாந்து, 12.2 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து மிரட்டியது. 19 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார் பெத்தெல். வில் ஜாக்ஸ் 35 ரன்களுக்கு அர்ஷ்தீப் பந்தில் ஆட்டமிழந்த பிறகு தனியாகப் போராட வேண்டிய நிலைமை பெத்தெலுக்கு ஏற்பட்டது. அவர் 45 பந்துகளில் சதமடித்து பிறகு கடைசி ஓவரில் 105 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். இறுதியில் இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்து நூலிழையில் தோற்றது. 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி வரும் ஞாயிறன்று அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

T20 WC: Team India survive Bethell scare; book title clash against NZ following nail-biting 7 run win at Wankhede