மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தில்லி டெஸ்ட் நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்து வெற்றியை நெருங்கியுள்ளது.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் தில்லியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 518 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனதை அடுத்து மீண்டும் பேட்டிங் செய்ய இந்திய அணி அழைத்தது.
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்திருந்தது. ஜான் கேம்பெல் 87 ரன்களுடனும் ஷே ஹோப் 66 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. 87 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடங்கிய கேம்பெல் டெஸ்டில் தனது முதல் சதத்தை அடித்தார். சதமடித்த இவர் 115 ரன்களுக்கு ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். கேம்பெல் மற்றும் ஹோப் 3-வது விக்கெட்டுக்கு 177 ரன்கள் சேர்த்தார்கள்.
ஷே ஹோப் மற்றும் கேப்டன் ராஸ்டன் சேஸ் 4-வது விக்கெட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் சேர்த்தார்கள். கேம்பெல் வரிசையில் ஷே ஹோப்பும் டெஸ்ட் சதத்தை அடித்தார். இவர் 103 ரன்கள் எடுத்து சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். ராஸ்டன் சேஸ் 40 ரன்களுக்கு ஆட்டமிழக்க மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங் மீண்டும் சரிவைக் கண்டது. முன்னிலையைப் பெற்றாலும் 311 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது.
இருந்தபோதிலும், ஜஸ்டின் கிரீவ்ஸ் மற்றும் ஜேடன் சீல்ஸ் கடைசி விக்கெட்டுக்கு கூட்டணி அமைத்து போராடினார்கள். மேற்கிந்தியத் தீவுகளின் முன்னிலை 100 ரன்களை கடக்க இருவரும் உதவினார்கள். ஜஸ்டின் கிரீவ்ஸ் அரை சதம் அடித்தார். இந்த இணை கடைசி விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தபோது, 32 ரன்கள் எடுத்திருந்த சீல்ஸ் ஆட்டமிழந்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணி 390 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கிரீவ்ஸ் 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் கடைசி விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்து இந்திய அணியைச் சோதித்தார்கள்.
இந்திய அணியில் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
இந்திய அணியின் வெற்றிக்கு 121 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி இலக்கை இன்றே அடைந்துவிடலாம் என்கிற முனைப்பை முதல் பந்திலேயே வெளிப்படுத்தினார் ஜெயிஸ்வால். ஆனால், இரு பவுண்டரிகள் மட்டுமே அவரால் அடிக்க முடிந்தது. வாரிகன் பந்தைத் தூக்கி அடிக்கப் பார்த்து 8 ரன்களுக்கு பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனார் ஜெயிஸ்வால்.
ஆனால், கேஎல் ராகுல் மற்றும் சாய் சுதர்சன் அவசரம் காட்டாமல் நிதானமாக விளையாடினார்கள். நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 25 ரன்களுடனும் சாய் சுதர்சன் 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள். இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 58 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. கடைசி நாள் ஆட்டத்தில் இதை அடையும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வெல்லும்.
Ind v WI | India v Windies | India v West Indies | Sai Sudharsan | KL Rahul | Yashasvi Jaiswal | John Campbell | Shai Hope | Justin Greaves | Jayden Seales |