இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 608 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பிர்மிங்ஹமில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஷுப்மன் கில்லின் இரட்டைச் சதத்தால் 587 ரன்கள் குவித்தது. முஹமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் வேகத்தில் இங்கிலாந்து 407 ரன்களுக்கு சுருண்டது.
180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்து 244 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கேஎல் ராகுல் 28 ரன்களும் கருண் நாயர் 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
4-வது நாள் ஆட்டத்தில் கருண் நாயர் சிறிது நேரம் மட்டுமே தாக்குப்பிடித்து 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அரை சதம் அடித்த கேஎல் ராகுல் 55 ரன்களுக்கு ஜாஷ் டங் பந்தில் போல்டானார்.
கேப்டன் ஷுப்மன் கில் களத்தில் நிற்க, துணை கேப்டன் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடினார். இங்கிலாந்தும் கேட்ச் வாய்ப்பை தவறவிட, பந்த் இதை நன்கு பயன்படுத்திக் கொண்டார். 4-வது நாள் ஆட்டத்தில் கடைசிப் பகுதியில் சில நேரம் இங்கிலாந்தை பேட்டிங் செய்ய வைக்க வேண்டும் என்ற இந்திய அணியின் திட்டம் அப்பட்டமாக வெளிப்பட்டது.
இங்கிலாந்து ஷார்ட் பந்து உத்தியைப் பயன்படுத்தியும் பலனில்லை. முதலில் ஷுப்மன் கில் 57 பந்துகளில் அரை சதம் அடிக்க, ரிஷப் பந்த் 48 பந்துகளில் அரை சதம் அடித்தார். அரை சதம் அடித்த பந்த் 58 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் ஆட்டமிழக்கும்போது, இந்திய அணியின் முன்னிலை 400-ஐ தாண்டியிருந்தது.
இதன்பிறகு, ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டை போல விளையாட, ஷுப்மன் கில் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து கூட்டணியைக் கட்டமைத்தார். ஷுப்மன் கில் 129 பந்துகளில் சதமடித்தார். இதன்பிறகு, கில்லின் ஆட்டம் கில்லியாக மாறியது.
ஜடேஜா 94 பந்துகளில் அரை சதமடிக்க, ஷுப்மன் கில் 156 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார். 80-வது ஓவரிலேயே இந்திய அணி 400 ரன்களை கடந்தது. 162 பந்துகளில் 161 ரன்கள் எடுத்து ஷுப்மன் கில் ஆட்டமிழந்தார். ஒரு டெஸ்டில் அதிக ரன்கள் (430 ரன்கள்) எடுத்தவர்களில் கிரஹம் கூச்சுக்கு (456 ரன்கள்) அடுத்த இடத்தில் ஷுப்மன் கில் உள்ளார். ஒரு டெஸ்டில் 350 ரன்களுக்கு மேல் குவிக்கும் முதல் இந்திய வீரர் இவர் தான். சுனில் காவஸ்கர் ஒரு டெஸ்டில் 344 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.
நிதிஷ் குமார் ரெட்டி 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் வந்த வேகத்தில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார். இந்திய அணியின் முன்னிலை 600 ரன்களை கடந்தது. 607 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தபோது, இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் ஷுப்மன் கில். 4-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 15 ஓவர்களாவது பேட் செய்ய வேண்டும் என்பது இந்திய அணியின் திட்டம்.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 427 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 69 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களும் எடுத்தார்கள். முதல் இன்னிங்ஸில் 587 ரன்களும் 2-வது இன்னிங்ஸில் 427 ரன்களும் எடுத்ததன் மூலம் முதன்முறையாக டெஸ்டில் 1,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளது இந்தியா.
இந்தியப் பந்துவீச்சாளர்கள் வேகமாகப் பந்துவீசியதால், கூடுதலாக ஒரு ஓவர் என 4-வது நாளில் மொத்தம் 16 ஓவர்கள் வீசினார்கள். முதல் ஓவரிலேயே ஸாக் கிராலேவை டக் அவுட் செய்தார் முஹமது சிராஜ். அடுத்து ஆடுகளத்தில் இருந்த லேசான உதவியைப் பயன்படுத்தி பென் டக்கெட் (25) மற்றும் ஜோ ரூட் (6) விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
4-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் எடுத்துள்ளது. ஆலி போப் 24 ரன்களுடனும் ஹாரி புரூக் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள். கடைசி நாளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினால், இந்திய அணி எட்ஜ்பாஸ்டனில் முதல் வெற்றியை ருசிக்கலாம்.