படம்: https://x.com/SkyCricket
விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியாவுக்கு மட்டும் சலுகையா?: நாசர் ஹூசைன், மைக்கேல் ஆதர்டன் சாடல்

"அவர்கள் ஒரே இடத்தில், ஒரே விடுதியில் இருக்கிறார்கள். பயணம் மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஒரே ஓய்வறைதான். ஆடுகளம் குறித்தும் தெரியும்."

கிழக்கு நியூஸ்

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் இந்தியா துபாயில் மட்டுமே விளையாடுவது மூலம் அவர்களுக்கு மட்டும் சலுகையா என இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் மைக்கேல் ஆதர்டன், நாசர் ஹூசைன் விமர்சனம் வைத்துள்ளார்கள்.

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்ததால், இந்தியா விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெறுகின்றன. இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றால், அந்த ஆட்டங்களும் துபாயில் நடைபெறும். இந்தியாவை எதிர்கொள்ளும் அணிகள் துபாய் வந்து விளையாட வேண்டிய சூழல் உள்ளது. அது போட்டியை நடத்தும் பாகிஸ்தானாக இருந்தாலும் அதே நிலை தான்.

மற்ற அணிகள் வெவ்வேறு ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு விளையாடும்போது, பயணம் மேற்கொள்வது, சூழல்களுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்வது, ஆடுகளங்கள் பற்றிய புரிதல் என நிறைய சவால்கள் உள்ளன. இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவதால் இதுபோன்ற சவால்கள் எதுவும் அவர்களுக்கு இல்லை என்பது அண்மை விமர்சனங்களாக எழுந்துள்ளன.

இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் மைக்கேல் ஆதர்டன் மற்றும் நாசர் ஹூசைன் ஸ்கை ஸ்போர்ட்ஸ் பாட்காஸ்டில் இதுபற்றி உரையாடியுள்ளார்கள்.

மைக்கேல் ஆதர்டன் பேசுகையில், "சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் இந்திய அணி துபாயில் மட்டும் விளையாடுவதால், அவர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் என்ன?

இந்திய அணிக்கு இது எந்தளவுக்கு சாதகமாக அமையும் என்பதைக் கணிப்பது கடினம். ஆனால், துபாயில் மட்டும் விளையாடுவதால் மறுக்க முடியாத நன்மைகளை இந்தியா அடைகிறது" என்று தனது கருத்தை முன்வைத்தார்.

மேலும், "இந்திய அணி ஓர் இடத்தில் மட்டுமே விளையாடுகிறது. மற்ற அணிகளைப்போல இரு வேறு இடங்களுக்கு, இரு வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டியதில்லை. எனவே, துபாயிலுள்ள சூழல்களைப் பொறுத்தே அணித் தேர்வில் கவனம் செலுத்தலாம். மேலும், அரையிறுதிக்குத் தகுதி பெறும் பட்சத்தில் அதை எங்கு விளையாடப்போகிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இது மறுக்க முடியாத அளவில் இந்தியாவுக்கு சாதகம் தான். ஆனால், இந்தியாவுக்குக் கிடைக்கும் நன்மைகளின் அளவுகோலைக் கண்டறிவது கடினம்" என்றார் ஆதர்டன்.

நாசர் ஹூசைன் பதிலளித்துப் பேசுகையில், "துபாயில் மட்டும் விளையாடுவது சாதகமான ஒன்று தான். சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் சிறந்த அணிக்கு இந்த அனுகூலம் கிடைத்துள்ளது. நான் டிவீட் ஒன்றை பார்த்தேன். அதில் போட்டியை நடத்துவது பாகிஸ்தான். உள்நாட்டுப் பலன்களைப் பெறுவது இந்தியா என்று பதிவிடப்பட்டிருந்தது. இந்தப் பதிவு சரியாக சுருக்கி விளக்கமளித்துவிட்டது.

அவர்கள் ஒரே இடத்தில், ஒரே விடுதியில் இருக்கிறார்கள். பயணம் மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஒரே ஓய்வறைதான். அவர்களுக்கு ஆடுகளம் குறித்தும் தெரியும். ஆடுகளத்துக்கு ஏற்ப அணியைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

அணித் தேர்விலும் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளார்கள். துபாய் எப்படி இருக்கும் என்பது பற்றி அவர்களுக்குத் தெரியும். அனைத்து சுழற்பந்துவீச்சாளர்களையும் அவர்கள் அணிக்குத் தேர்வு செய்துவிட்டார்கள். கூடுதல் வேகப்பந்துவீச்சாளரைத் தேர்வு செய்யாதது ஏன்? எதற்காக இவ்வளவு சுழற்பந்துவீச்சாளர்கள்? என்ற விவாதம் இந்திய ஊடகங்களில் எழுந்தது. ஏன் இவ்வளவு சுழற்பந்துவீச்சாளர்கள் என்பதை நாம் தற்போது பார்க்கிறோம்.

உதாரணத்துக்கு இங்கிலாந்து போன்ற மற்ற அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றால் அவர்களிடத்தில் ஒரு சுழற்பந்துவீச்சாளர் மட்டுமே உள்ளார். பாகிஸ்தானிடம் ஒரு முன்னனி சுழற்பந்துவீச்சாளர் மட்டுமே உள்ளார்.

மற்ற அணிகள் கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டியின் சூழல்களுக்கு ஏற்ப தங்களுடைய அணியைத் தேர்வு செய்ய வேண்டும். பிறகு, அவர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும். சூழல்களுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ள வேண்டும்.

எனவே, இது இந்தியாவுக்கு சாதகமான ஒன்றுதான். ஆனால், வேறு என்ன நடந்துவிட முடியும். பாகிஸ்தானுக்கு வர இந்தியா மறுத்துவிட்டால், வேறென்ன நடக்க முடியும். இந்தியா, பாகிஸ்தான் இல்லாமல் இதுபோன்ற ஒரு போட்டியை நடத்த முடியாது. எனவே, துபாயில் நடைபெறுகிறது.

அவர்கள் மகிழ்ச்சியாக, சௌகரியமாக உள்ளார்கள். 6 ஆட்டங்களை அங்கு விளையாடுகிறார்கள். இவை அனைத்தையும் வென்றுவிட்டால், மற்றொரு ஐசிசி கோப்பையை வெல்வார்கள்" என்றார் நாசர் ஹூசைன்.