ANI
விளையாட்டு

முதல் டி20யில் வங்கதேசத்தை ஊதித் தள்ளிய இந்திய அணி!

அர்ஷ்தீப் சிங் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

கிழக்கு நியூஸ்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20யில் மிக எளிதாக வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.

சச்சின், இரட்டைச் சதமடித்த குவாலியரில் நடைபெற்ற முதல் டி20யில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ் அறிமுகமானார்கள். 2021-க்குப் பிறகு இந்திய டி20 அணியில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி இடம்பிடித்தார்.

முதல் ஓவரிலேயே லிட்டன் தாஸை 4 ரன்களுக்கும் பிறகு, பர்வேஸை 8 ரன்களுக்கும் வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். பவர்பிளேயில் வங்கதேச அணி 2 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது. வருண் சக்ரவர்த்தி முதல் ஓவரில் 15 ரன்கள் கொடுத்தாலும் பிறகு சிறப்பாகப் பந்துவீசி வங்கதேச அணியைக் கட்டுப்படுத்தினார். மஹ்முதுல்லாவின் விக்கெட்டை வீழ்த்தி தனது முதல் சர்வதேச விக்கெட்டை எடுத்தார் மயங்க் யாதவ். வருண் சக்ரவர்த்தி மூன்று விக்கெட்டுகள் எடுத்து தன் மறுவருகையை பலமாக நிரூபித்தார். 19.5 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேசம். மெஹிதி ஹசன் ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், வருண் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 1 விக்கெட் எடுத்து 21 ரன்கள் கொடுத்தார்.

இந்திய அணிக்கு இலக்கை விரட்ட சிரமமே ஏற்படவில்லை. சஞ்சு சாம்சன் தவிர இதர 4 பேட்டர்களும் குறைந்தது ஒரு சிக்ஸராவது அடித்தார்கள். சஞ்சு சாம்சன் 29, அபிஷேக் சர்மா 16, சூர்யகுமார் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். நிதிஷ் குமார் 16, பாண்டியா 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்தியா 11.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. அர்ஷ்தீப் சிங் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

2-வது டி20 ஆட்டம் புதன் அன்று தில்லியில் நடைபெறவுள்ளது.