விளையாட்டு

மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா தோல்வி!

பிஜிடி தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா...

கிழக்கு நியூஸ்

இந்தியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 474 ரன்களும் இந்தியா 369 ரன்களும் எடுத்தன. நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து 333 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் மேற்கொண்டு 6 ரன்கள் மட்டும் கூடுதலாக எடுத்து 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி விக்கெட்டாக 41 ரன்கள் எடுத்த நேதன் லயன் பும்ராவிடம் வீழ்ந்தார்.

இந்திய அணியில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

92 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 340 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. தொடக்கத்தில் ஜெயிஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா தடுப்பாட்டத்துக்கான முனைப்பை வெளிப்படுத்தினார்கள். 16 ஓவர்கள் தாக்குப்பிடித்த ரோஹித் சர்மா 9 ரன்களுக்கு கம்மின்ஸிடம் மீண்டும் வீழ்ந்தார். அதே ஓவரில் கேஎல் ராகுல் டக் அவுட் ஆனார்.

விராட் கோலி சற்று நேரம் தாக்குப்பிடித்து விளையாடி 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மீண்டும் ஸ்டம்ப் லைனில் வெளியே வந்த பந்தைத் தொட்டு ஆட்டமிழந்தார் கோலி.

இதன்பிறகு ஜெயிஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் இணை சிறப்பாகக் கூட்டணி அமைத்தது. திடமான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களை சோர்வடையச் செய்தார்கள்.

இந்த இணை 4-வது விக்கெட்டுக்கு 50 ரன்களை கடந்து தேநீர் இடைவேளை வரை விக்கெட்டை இழக்காமல் விளையாடியது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு, ஆஸ்திரேலியா நேதன் லயன் மற்றும் டிராவிஸ் ஹெட் என இரு முனைகளிலும் சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு கையாண்டது.

ஹெட் பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்ற ரிஷப் பந்த் பவுண்டரி எல்லையில் மிட்செல் மார்ஷிடம் கேட்ச் ஆனார். ஜெயிஸ்வால், பந்த் இணை 197 பந்துகளில் 88 ரன்கள் சேர்த்தது.

ரிஷப் பந்த் விக்கெட் அடுத்தடுத்த விக்கெட்டுகளுக்கான கதவைத் திறந்துவிட்டது.

நம்பிக்கை வைத்திருந்த நிதிஷ் ரெட்டி 1 ரன்னுக்கு லயனிடம் வீழ்ந்தார். ஜெயிஸ்வால் 84 ரன்கள் எடுத்திருந்தபோது, பேட் கம்மின்ஸ் ஷார்ட் பந்தை மடக்கி அடிக்கப் பார்த்து ஆட்டமிழந்தார்.

கள நடுவர் கீப்பர் கேட்சுக்கு அவுட் கொடுக்காததால், ஆஸ்திரேலியா ரெவ்யூ எடுக்க சர்ச்சைக்குரிய வகையில் ஜெயிஸ்வால் விக்கெட் அவுட் எனக் கொடுக்கப்பட்டது. 84 ரன்கள் எடுத்த அவர் மீண்டும் 80-களில் ஆட்டமிழந்தார்.

வாஷிங்டன் சுந்தர் 45 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். மற்றவர்கள் யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. கடைசி 7 விக்கெட்டுகளை 34 ரன்களுக்கு இழந்த இந்தியா 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் ஜெயிஸ்வால் (84), ரிஷப் பந்த் (30) தவிர மற்ற பேட்டர்கள் யாரும் 10 ரன்களை கூடத் தொடவில்லை.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிஜிடி தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.