இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் ஜடேஜா, அஸ்வினின் சுழலில் சிக்கி தடுமாறி வருகிறது நியூசிலாந்து அணி.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் மும்பையில் நேற்று (நவ.1) தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரின் அபார பந்துவீச்சில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது நியூசிலாந்து அணி.
டேரில் மிட்செல் 82 , வில் யங் 71 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணியில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னின்ஸை தொடங்கிய இந்திய அணி கில், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தரின் அதிரடி ஆட்டத்தால் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கில் 90 ரன்களும், ரிஷப் பந்த் 60 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 38 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் பிறகு 28 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி ஜடேஜா மற்றும் அஸ்வினின் சுழலில் திணறியது.
முதல் இன்னிங்ஸில் அசத்திய வில் யங் மீண்டும் அரைசதம் அடித்தார். மற்றபடி கான்வே 22, டேரில் மிட்செல் 21, கிளென் பிளிப்ஸ் 26 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், கடந்த இன்னிங்ஸில் விக்கெட் எடுக்காத அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
2-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. 2-வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் மட்டுமே மீதமுள்ள நிலையில் நியூசிலாந்து அணி 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.