தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி மிக மோசமான நிலையில் விளையாடி வருகிறது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் குவஹாத்தியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 489 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி 288 ரன்கள் பின்தங்கியிருந்தது.
இருந்தபோதிலும், இந்திய அணியை ஃபாலோ ஆன் செய்யச் சொல்லாமல், இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது தென்னாப்பிரிக்கா. 3-வது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்தது.
நான்காவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்க பேட்டர்கள் சிறப்பாக விளையாடினார்கள். முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்த நிலையில், ரயன் ரிக்கெல்டன் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எய்டன் மார்க்ரம் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் டெம்பா பவுமாவை 3 ரன்களுக்கு வீழ்த்தினார் வாஷிங்டன் சுந்தர்.
இதன்பிறகு ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் டோனி டி ஸார்ஸி சிறப்பான கூட்டணியை அமைத்தார்கள். டி ஸார்ஸி சற்று வேகமாக விளையாடி 68 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அரை சதத்தைத் தவறவிட்டார். ஸ்டப்ஸ் பொறுப்புடன் விளையாடி அரை சதத்தைக் கடந்தார். தென்னாப்பிரிக்காவின் முன்னிலையும் 450 ரன்களை தாண்டியது.
ஸ்டப்ஸ் சதமடித்தவுடன் டிக்ளேர் செய்யலாம் என தென்னாப்பிரிக்க நினைத்திருக்கக்கூடும். ஆனால், 94 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜடேஜா சுழலில் ஸ்டப்ஸ் போல்டானார். இவருடைய விக்கெட்டுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
78.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் வெற்றிக்கு 549 ரன்கள் என்ற சாத்தியமற்ற இலக்கை நிர்ணயித்தது. வியான் முல்டர் 35 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
மிகப் பெரிய இலக்கை நோக்கி இந்தியத் தொடக்க பேட்டர்கள் களமிறங்கினார்கள். யஷஸ்வி ஜெயிஸ்வால் அவருடைய பாணியில் சற்று அதிரடி காட்டி ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடித்தார். 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த அவர் மார்கோ யான்சென் பந்தில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுல் 6 ரன்கள் எடுத்து சைமன் ஹார்மர் பந்தில் ஆட்டமிழந்தார்.
பிறகு, குல்தீப் யாதவ் நைட் வாட்ச்மேனாக களமிறக்கப்பட்டார். சாய் சுதர்சன் மற்றும் குல்தீப் யாதவ் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்கள். 4-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது. சாய் சுதர்சன் 25 பந்துகளில் 2 ரன்களுடனும் குல்தீப் யாதவ் 22 பந்துகளில் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.
குவஹாத்தி டெஸ்டில் இன்னும் ஒரு முழு நாள் மீதமுள்ளது. வெற்றிக்கு 522 ரன்கள் தேவை. நாள் முழுக்க தடுப்பாட்டத்தை விளையாடி டிரா செய்ய வேண்டுமானால் இந்தியா முயற்சிக்கலாம். ஒருவேளை இந்தியா இதை டிரா செய்தாலும், கொல்கத்தாவில் ஏற்கெனவே தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளதால், தொடரை இழக்க நேரிடும். தோல்வியடைந்தால், தொடரை முழுமையாக இழக்க நேரிடும்.
Ind v SA | India v South Africa | IND v SA | Guwahati Test | Marco Jansen | KL Rahul | Jaiswal |