ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது.
2025-ன் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்து வருகிறது. அதன் 6-வது போட்டியாக இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இவ்விரு நாடுகளும் கிரிக்கெட்டில் மோதிக் கொண்ட நிலையில், அதன் தாக்கம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதற்கிடையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களம் இறங்கியது.
தொடக்கம் முதலாகவே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியது. முதல் ஓவரிலேயே பாகிஸ்தான் வீரர் சயிம் அயூப் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். அடுத்த ஓவரில் முகமது ஹாரிஸ் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார்.
அதன் பின் ஒவ்வொரு பந்தையும் கவனத்துடன் விளையாடிய பாகிஸ்தான் அணி, அக்ஸர் பட்டேல் பந்து வீசிய 8 -வது ஓவரில் 3-வது விக்கெட்டை இழந்தது. அதைத் தொடர்ந்து 10-வது ஓவரிலும் அக்சர் பட்டேல் மற்றுமொரு விக்கெட்டை எடுத்தார். தொடர்ந்து 13-வது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்கள் போனதால் பாகிஸ்தான் அணி சரிவைக் கண்டது.
இதற்கிடையில், பாகிஸ்தானை 100 ரன்களை நோக்கி முன்னேற்ற ஷாகிப் சாதா ஃபர்ஹான் கடுமையாக முயன்றார். பும்ராவின் பந்து வீச்சில் அவர் இரு சிக்சர்களை விளாசினார். ஆனால் 18-வது ஓவரில் வருன் சக்கரவர்த்தியின் சுழல் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்க்ஸை முடித்தது.
வெற்றிக்கு 128 ரன்கள் இலக்கு என்ற நிலையில் இந்தியா அடுத்த இன்னிங்க்ஸைத் தொடங்கியது.
முதலில் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா, 13 பந்துகளில் 2 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் என 31 ரன்களை எடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் களம் கண்ட சுப்மன் கில், 2-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், 37 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றியை நோக்கிக் கூட்டிச் சென்றார். சூர்யகுமார் - திலக் வர்மா இணை இந்திய அணிக்கு 56 ரன்களைச் சேர்த்தது. இதில் திலக் வர்மா 31 பந்துகளில் 31 ரன்களைச் சேர்த்தார். அவர் 13-வது ஓவரில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சிவன் துபே, 7 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனால் இந்தியா 16-வது ஓவரில் 125 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசிப் பந்தில் சூர்யகுமார் யாதவ் சிக்சர் விளாசினார். இதன்மூலம் 4 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது.
2020-க்குப் பிறகு இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் பாகிஸ்தானின் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகிய நட்சத்திர வீரர்கள் பங்கேற்காத இப்போட்டி, புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.
India Vs Pakistan | Asia Cup | T20 |