ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆசியக் கோப்பை டி20 போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் துபாயில் மோதின. டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இரு அணி கேப்டன்களும் மீண்டும் கைக்குலுக்கிக் கொள்ளவில்லை. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்ரவர்த்தி மீண்டும் அணிக்குத் திரும்பினார்கள்.
சயிம் அயூப் மோசமான ஃபார்மில் இருப்பதால், அவர் தொடக்க பேட்டராக களமிறங்கவில்லை. சாஹிப்ஸதா ஃபர்ஹான் மற்றும் ஃபகார் ஸமான் களமிறங்கினார்கள். ஹார்திக் பாண்டியாவின் இரண்டாவது ஓவரில் ஃபகார் ஸமான் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சனின் கேட்ச் சமூக ஊடகங்களில் விவாதமாகியுள்ளது.
இன்றைய நாள் பும்ராவுக்கானதாக இல்லை. முதல் ஓவரில் இரு பவுண்டரிகள் கொடுத்தார். அடுத்த ஓவரில் நோ-பால் உள்பட இரு பவுண்டரிகள். பவர்பிளேயின் கடைசி ஓவரையும் அவரே வீசினார். அதிலும் இரு பவுண்டரிகள். பவர்பிளேயில் மூன்று ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 34 ரன்கள் கொடுத்திருந்தார் பும்ரா.
இதற்கு முக்கியக் காரணம் சாஹிப்ஸதா ஃபர்ஹான். இவர் தொடக்கம் முதலே அதிரடிக்கான முனைப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். குரூப் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக தடுமாறிய பாகிஸ்தான், இந்த ஆட்டத்தில் 6 ஓவர்களில் 55 ரன்கள் குவித்து நல்ல அடித்தளத்தை அமைத்தது. இந்திய வீரர்களும் கைக்கு வந்த கேட்சுகளையெல்லாம் தவறவிட்டு உதவினார்கள்.
வழக்கமாக நடு ஓவர்களில் சுழற்பந்துவீச்சு மூலம் ஆட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் இந்தியா. கேட்சுகளை தவறவிட்டுக்கொண்டே இருந்ததால், வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஓவர்களிலும் சிக்ஸர்கள் பறந்தன. ஃபர்ஹான் அதிரடியாக விளையாடினாலும், ஸ்டிரைக்கை மாற்றி விளையாடுவதில் தடுமாறினார். இதனால், பெரியளவிலான ரன் ரேட்டில் ரன் குவித்திருக்க வேண்டிய பாகிஸ்தான் ஓவருக்கு தலா 10-க்கு கீழ் விளையாடி வந்தது. 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான்.
ஃபர்ஹான் 34-வது பந்தில் அரை சதம் அடித்தார். துப்பாக்கியால் சுடுவதைப் போல கொண்டாடி அனைவரது புருவத்தையும் உயர்த்தச் செய்தார் ஃபர்ஹான். இந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் தற்போது அதிகளவில் பரவி வருகிறது.
11-வது ஓவரில் வேறு வழியில்லாமல் 6-வது பந்துவீச்சாளரான ஷிவம் துபேவை உள்ளே கொண்டு வந்தார் சூர்யகுமார் யாதவ். முதல் ஓவரிலேயே சயிம் அயூப் (21) விக்கெட்டை வீழ்த்தினார். ஃபர்ஹான் - சயிம் அயூப் கூட்டணி இரண்டாவது விக்கெட்டுக்கு 49 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தது.
11-வது ஓவரிலிருந்து ஆட்டத்தின் வேகம் குறைந்தது. ஃபர்ஹானையும் (58) துபே வீழ்த்த, ஹுசைன் தலத்தை குல்தீப் யாதவ் வீழ்த்தினார். 16-வது ஓவர் வரை ஒரு பவுண்டரி கிடையாது. கடைசி நான்கு ஓவர்களில் பாகிஸ்தானின் கை சற்று ஓங்கியது. ஷிவம் துபேவின் கடைசி ஓவரில் முஹமது நவாஸ் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார். பும்ரா ஓவரில் நவாஸ் மிகவும் மோசமான முறையில் ரன் அவுட்டானாலும், ஃபஹீம் அஷ்ரஃப் இதே ஓவரில் சிக்ஸரை பறக்கவிட்டார். பும்ரா 4 ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்தாமல் 45 ரன்கள் கொடுத்தார்.
ஹார்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் ஃபஹீம் ஒரு பவுண்டரி அடித்தது மட்டுமில்லாமல், கடைசி பந்தை சிக்ஸருக்கும் அனுப்பினார். 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான். ஃபஹீம் அஷ்ரஃப் 8 பந்துகளில் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் சல்மான் அகா 13 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
172 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினார். ஷஹீன் அஃப்ரிடி முதல் பந்தை ஷார்ட் பந்தாக வீசினார். சிக்ஸருக்கு அனுப்பி கணக்கைத் தொடங்கினார் அபிஷேக் சர்மா. அஃப்ரிடி மற்றும் ஹாரிஸ் ராஃப் தொடர்ந்து அபிஷேக் சர்மாவை சீண்டிக் கொண்டிருந்தார்கள். ஆசியக் கோப்பை ஒரு வழியாக சூடு பிடித்தது என்று ரசிகர்களுக்குத் தோன்றியிருக்கும்.
பவர்பிளேயில் யார் பந்துவீச வந்தாலும் விளாசல் தான் என இருவரும் அதிரடி காட்டினார்கள். 6 ஓவர்கள் முடிவில் அபிஷேக் மற்றும் கில் தலா 18 பந்துகளை எதிர்கொண்டு முறையே 33 மற்றும் 35 ரன்கள் எடுத்திருந்தார்கள். இந்திய அணி பவர்பிளேயில் 69 ரன்கள் விளாசியது.
பாகிஸ்தானின் நெ. 1 சுழற்பந்துவீச்சாளரான அப்ரார் அஹமது ஓவரில் இரு சிக்ஸர்களை நொறுக்கி கலங்கடித்தார் அபிஷேக் சர்மா. கில்லும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டையெல்லாம் கட்டவிழ்த்து பவுண்டரிகளை அடித்தார். பாகிஸ்தான் தரப்பிலும் கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டு உதவி வழங்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி அபிஷேக் சர்மா 24-வது பந்தில் அரை சதம் அடித்தார். 9-வது ஓவரிலேயே விக்கெட்டை இழக்காமல் 100 ரன்கள் அடித்து அதகளம் புரிந்துகொண்டிருந்தது இந்தியா.
10-வது ஓவர் முழுமையாக முடிவதற்குள் ஷுப்மன் கில்லுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதால், இடைவேளையானது நடுவிலேயே எடுக்கப்பட்டது. இடைவேளை முடிந்து முதல் பந்திலேயே ஷுப்மன் கில் 28 பந்துகளில் 47 ரன்களுக்கு போல்டானார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் ஹாரிஸ் ராஃப் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்ப, ஃபஹீம் ஓவரில் இரு பவுண்டரிகளும் அப்ரார் ஓவரில் ஒரு சிக்ஸரும் அடித்தார் அபிஷேக் சர்மா. சிக்ஸர் அடித்த அடுத்த பந்திலேயே அப்ராரிடம் வீழ்ந்தார். அபிஷேக் சர்மா 39 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். கடைசி 7 ஓவர்களில் 46 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்தியா இருந்தது. சஞ்சு சாம்சன் நீண்ட நேரம் தடுமாறி 17 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால், ஹார்திக் பாண்டியா முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்ப, திலக் வர்மாவும் ஒரு சிக்ஸர் அடித்து ஆசுவாசப்படுத்தினார். அஃப்ரிடி ஓவரில் திலக் வர்மா தலா ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரியை அடிக்க இந்தியா வெற்றி பெற்றது. 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 19 பந்துகளில் 30 ரன்களுடனும் பாண்டியா 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்கிக் கொள்ளவில்லை. பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா இந்த ஆட்டத்தின் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.
Asia Cup T20 | Asia Cup | Asia Cup 2025 | India v Pakistan | Ind v Pak | Abhishek Sharma | Shubman Gill | Sahibzada Farhan | Fakhar Zaman | Faheem Ashraf | Haris Rauf | Shaheen Afridi | Suryakumar Yadav |