ANI
விளையாட்டு

முதல் ஒருநாள்: அதிரடி பேட்டிங்கில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா

87 ரன்கள் எடுத்த ஷுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

கிழக்கு நியூஸ்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் நாக்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் யஷஸ்வி ஜெயிஸ்வால், ஹர்ஷித் ராணா அறிமுகமானார்கள். விராட் கோலி காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை.

இங்கிலாந்து தொடக்க பேட்டர்கள் ஃபில் சால்ட், பென் டக்கெட் அதிரடியான தொடக்கத்தைத் தந்தார்கள். குறிப்பாக ஹர்ஷித் ராணா வீசிய 6-வது ஓவரில் சால்ட் மூன்று சிக்ஸர்கள், இரு பவுண்டரிகள் விளாசி நொறுக்கினார்.

அக்‌ஷர் படேலைக் கொண்டுசுழற்பந்துவீச்சை அறிமுகம் செய்தார் ரோஹித் சர்மா. இந்த ஓவரிலும் டக்கெட் இரு பவுண்டரிகள் விளாசினார். இங்கிலாந்து அணி 8 ஓவர்களில் 71 ரன்கள் விளாசியது.

9-வது ஓவரில் ஷ்ரேயஸ் ஐயரின் அற்புதமான ஃபீல்டிங் காரணமாக, ஃபில் சால்ட் 26 பந்துகளில் 43 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். அடுத்த ஓவரில் ஜெயிஸ்வாலின் மிரட்டலான கேட்சில் டக்கெட் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதே ஓவரில் ஹாரி புரூக் டக் அவுட் ஆனார்.

தொடக்க அமைத்துக் கொடுத்த அதிரடி தொடக்கத்தை இங்கிலாந்து பயன்படுத்தத் தவறியது. சற்று தாக்குப்பிடித்து விளையாடிய ஜோ ரூட் 19 ரன்களுக்கு ஜடேஜா சுழலில் ஆட்டமிழந்தார்.

பேட்டிங்கில் நம்பிக்கையளித்த கேப்டன் ஜாஸ் பட்லர் இந்தியப் பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ள ஜேக்கப் பெத்தெல் ஒத்துழைப்பு தந்தார். இந்தக் கூட்டணி 5-வது விக்கெட்டுக்கு 50 ரன்களை கடந்தது. பட்லரும் 58-வது பந்தில் அரைசதம் அடித்தார்.

இதைப் பெரிய ஸ்கோராக மாற்றாமல் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் பட்லர். அடுத்து வந்த பேட்டர்கள் சொதப்பினார்கள். நல்ல இன்னிங்ஸை வெளிப்படுத்திய பெத்தெல், 62 பந்துகளில் அரைசதம் அடித்தார். இவரும் அரைசத்தைப் பெரிய ஸ்கோராக மாற்றவில்லை. 51 ரன்களுக்கு ஜடேஜாவிடம் வீழ்ந்தார்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் கடைசி நேரத்தில் பேட்டை சுழற்றி அதிரடி காட்டினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முழுமையாக பேட் செய்யாத இங்கிலாந்து 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியில் ஹர்ஷித் ராணா மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

தொடக்க பேட்டர்களாக ஜெயிஸ்வால், ரோஹித் களமிறங்கினார். பெரும்பாலான ஸ்டிரைக்கை தன்வசம் வைத்திருந்த ஜெயிஸ்வால், அறிமுக இன்னிங்ஸில் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ரோஹித் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

விராட் கோலி இடத்தில் ஷுப்மன் கில் களமிறங்கினார். ஷ்ரேயஸ் ஐயர் 4-வது பேட்டராக விளையாடினார். ஷ்ரேயஸ் வந்தவுடன் ஷார்ட் பந்து உத்தியை இங்கிலாந்து கையிலெடுத்தது. ஷ்ரேயஸ் துணிச்சலாக ஆர்ச்சர் பந்தில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை நொறுக்கி, இங்கிலாந்து திட்டத்தைத் தவிடுபொடியாக்கினார்.

இதே அதிரடியைத் தொடர்ந்த அவர், 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். கில் - ஷ்ரேயஸ் கூட்டணியும் 28 பந்துகளில் 50 ரன்களை கடந்தது.

அரைசதம் அடித்த ஷ்ரேயஸ் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அக்‌ஷர் படேல் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். இவரும் சிறப்பாக பேட் செய்ய, இங்கிலாந்து அணி தடுமாறியது.

4-வது விக்கெட்டுக்கு இந்த இணை 51 பந்துகளில் 50 ரன்களை கடந்தது. கில் 60 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவருடைய அற்புதமான பேட்டிங்கால் இந்திய அணி 28.6 ஓவர்களிலேயே 200 ரன்களை கடந்தது. அக்‌ஷர் படேலும் 46 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இன்றைய நாளில் அரைசதத்தை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் ஆட்டமிழந்த நான்காவது வீரராக அக்‌ஷர் படேல் 52 ரன்களுக்கு அடில் ரஷித் பந்தில் போல்டானார். ராகுல் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். கில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹார்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தார்கள்.

38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்த இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.