ANI
விளையாட்டு

மகளிர் ஆசியக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு

கிழக்கு நியூஸ்

மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டனாக ஹர்மன்பிரீத் கௌர், துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனா தொடர்கிறார்கள்.

மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டி ஜூலை 19 முதல் ஜூலை 28 வரை இலங்கையில் நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. இந்திய அணி நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுடன் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இரு பிரிவுகளிலிருந்தும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதி ஆட்டம் ஜூலை 28-ல் நடைபெறுகிறது.

இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க டி20 தொடரில் இடம்பெற்ற 17 பேரில் அமன்ஜோத் கௌர் மற்றும் ஷப்னம் ஷகில் தவிர்த்து மீதமுள்ள 15 பேர் அணியில் நீடிக்கிறார்கள்.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை ஜூலை 19-ல் எதிர்கொள்கிறது. செப்டம்பர், அக்டோபரில் மகளிர் டி20 உலகக் கோப்பை வங்கதேசத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்கான சரியான பயிற்சிப் போட்டியாக ஆசியக் கோப்பை அமையவிருக்கிறது.

இந்திய அணி:

ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷெஃபாலி வெர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), உமா சேத்ரி (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்த்ராகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், டி ஹேமலதா, ஆஷா ஷோபனா, ராதா யாதவ், ஷ்ரேயங்கா பாட்டில், சஜீவன் சஜனா.

ஷ்வேதா செராவத், சைகா இஷக், தனுஜா கன்வர் மற்றும் மேக்னா சிங் ஆகியோர் இந்திய அணியுடன் பயணிக்கிறார்கள்.

2022 மகளிர் ஆசியக் கோப்பை இறுதிச் சுற்றில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது.