விளையாட்டு

இந்தியா 462 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: நியூசிலாந்துக்கு 107 ரன்கள் இலக்கு

மழை குறுக்கிட்டதால் நான்காம் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 462 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நியூசிலாந்து இன்னிங்ஸில் 4 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டதால் நான்காம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது.

இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது நாளிலிருந்து ஆட்டம் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 46 ரன்களுக்குச் சுருண்டது.

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் குவித்து 356 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் கடைசிப் பந்தில் விராட் கோலி 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. அரைசதம் அடித்து களத்திலிருந்த சர்ஃபராஸ் கான், நான்காம் நாள் ஆட்டத்திலும் நேர்மறையான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். சீரான இடைவெளியில் பவுண்டரிகளை அடித்து வந்த அவர், 110-வது பந்தில் பவுண்டரி அடித்து முதல் டெஸ்ட் சதத்தை எட்டினார். மறுமுனையில் ரிஷப் பந்த் தொடக்கத்தில் நிதானம் காட்டி விளையாடி 55-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

இந்திய அணி முன்னிலையை நெருங்கியபோது மழை குறுக்கிட்டதால் காலை 11 மணியளவில் ஆட்டம் தடைபட்டது. முன்கூட்டியே உணவு இடைவேளையும் எடுக்கப்பட்டு, ஆட்டத்தை நண்பகல் 12 மணிக்குத் தொடங்க நடுவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். உணவு இடைவேளையில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்து 12 ரன்கள் மட்டுமே பின்தங்கியிருந்தார்கள். சர்ஃபராஸ் கான் 125 ரன்களுடனும் ரிஷப் பந்த் 53 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகும் மழை தொடர்ந்ததால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றவுடன் பிற்பகல் 1.50 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. பிற்பகல் 3.30 மணிக்கு தேநீர் இடைவேளை. நான்காம் நாளின் கடைசிப் பகுதி ஆட்டம் பிற்பகல் 3.50-க்கு தொடங்கி மாலை 5.15 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

உணவு இடைவேளைக்குப் பிறகு ரிஷப் பந்த் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக அடிக்கத் தொடங்கினார். புதிய பந்தை விரைவில் எடுக்க வேண்டும் என்பதற்காக இருமுனையிலும் சுழற்பந்துவீச்சாளர்களைக் கையாண்டது நியூசிலாந்து. 80 ஓவர்களில் இந்திய அணி 400 ரன்களை தொட்டது.

புதிய பந்தை எடுப்பதற்கான வாய்ப்பை நியூசிலாந்து பயன்படுத்தியது. எதிர்பார்த்ததைப்போல புதிய பந்து, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இருவரும் நிதானத்தைக் கடைபிடிக்கத் தொடங்கினார்கள். சர்ஃபராஸ் கான் 150 ரன்களை எட்டினார். அடுத்த பந்திலேயே டிம் சௌதி பந்தைத் தூக்கி அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். சதத்தை நெருங்கிய விளையாடி வந்த ரிஷப் பந்த், டிம் சௌதி ஓவரில் 107 மீட்டர் தூரத்துக்கு மைதானத்துக்கு வெளியே சிக்ஸர் அடித்து அசத்தினார்.

99 ரன்கள் எடுத்திருந்தபோது வில்லியம் ஓ ரூர்க் பந்தில் ரிஷப் பந்த் போல்டானார். கேஎல் ராகுலும் இவருடையப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ராகுல் விக்கெட்டுடன் தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் புதிய பந்தைப் பயன்படுத்தி இந்திய பேட்டர்களை திணறடித்து விக்கெட்டை வீழ்த்தினார்கள். இந்திய அணி 462 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 106 ரன்கள் முன்னிலை பெற, நியூசிலாந்து வெற்றிக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன.

வெற்றி இலக்கை நோக்கி நியூசிலாந்து களமிறங்கியது. ஜஸ்பிரித் பும்ரா முதல் 4 பந்துகளைச் சிறப்பாக வீசினார். இதில் ஒரு எல்பிடபிள்யூவுக்கு ரெவ்யூ எடுத்து இந்திய அணி இழந்தது. 5-வது பந்தை வீசுவதற்கு முன்பு போதிய வெளிச்சமின்மை காரணமாக நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்தினார்கள்.

நியூசிலாந்து பேட்டர்கள் உடனடியாக மைதானத்தைவிட்டு வெளியேறினார்கள். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி நடுவர்களிடம் நீண்ட நேரம் வாதாடிப் பேசினார்கள். இருந்தபோதிலும், நடுவர்கள் முடிவில் மாற்றமில்லை. சிறிது நேரத்திலேயே மழையும் பெய்யத் தொடங்கியதால் மைதானம் மூடப்பட்டது.

நான்காம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது.