ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா முன்னிலை!  @indiancricketteam
விளையாட்டு

3-வது டி20: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்தியா முன்னிலை!

5 ஆட்டஙகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

யோகேஷ் குமார்

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான 3-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா- ஜிம்பாப்வே இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 3-வது ஆட்டம் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. சாய் சுதர்சன், ரியான் பராக், துருவ் ஜூரெல், முகேஷ் குமாருக்கு பதிலாக ஜெயிஸ்வால், சஞ்சு சாம்சன், துபே, கலீல் அஹமது ஆகியோர் அணியில் இடம்பெற்றனர்.

ஓவருக்கு 2 பவுண்டரிகள் அல்லது சிக்ஸர் என முதல் 5 ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி. 5 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு அடுத்த 3 ஓவர்களில் முறையே 1,4,8 ரன்கள் மட்டுமே வர, 8 ஓவர்கள் முடிவில் 67 ரன்கள் எடுத்தது.

முதல் 25 பந்துகளில் 50 ரன்களை எடுக்க, அடுத்த 50 ரன்களை சேர்க்க 51 பந்துகளை எடுத்துக்கொண்டது இந்திய அணி.

இதன் பிறகு ஜெயிஸ்வால் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ராஸா பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி ஆட்டத்தில் சதம் அடித்த அபிஷேக் சர்மா இம்முறை 10 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு கில்லுடன் கூட்டணி அமைத்தார் கெயிக்வாட்.

இருவரும் அதிரடியாக விளையாடி 72 ரன்கள் சேர்த்தனர். கில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 49 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து முஸாராபானி பந்தில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கெயிக்வாட் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 28 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சாம்சன் ஆட்டமிழக்காமல் 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

முஸாராபானி, ராஸா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சிக் காத்திருந்தது. மதவேரே 1 ரன்னில் அவேஷ் கான் பந்தில் வெளியேறினார். இதன் பிறகு மருமணி 10 பந்துகளில் 13 ரன்களிலும், பென்னட் 4 ரன்களிலும் வெளியேறினர். இதனால் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஜிம்பாப்வே அணி.

கேப்டன் சிக்கந்தர் ராஸா சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடினாலும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு கேம்பெல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர்களது விக்கெட்டுகளை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். 7 ஓவர்களில் 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது ஜிம்பாப்வே அணி.

இதைத் தொடர்ந்து மயர்ஸ் - மடாண்டே ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 40 பந்துகளில் 50 ரன்கள் எடுக்க அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. 16 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது. இந்த ஜோடியை வாஷிங்டன் சுந்தர் பிரித்தார். மடாண்டே 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 26 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஒருபக்கம் தனியாக போராடிய மயர்ஸ் அரை சதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மயர்ஸ் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் 5 ஆட்டஙகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது இந்திய அணி.