ரோஹித் 
விளையாட்டு

இதுபோன்ற சிறந்த அணியைப் பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்: ரோஹித்

கோப்பைகளை வெல்வதில் மும்பை ஒருபோதும் வருத்தமடையச் செய்யாது.

யோகேஷ் குமார்

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

பார்படாஸில் கடந்த ஜூன் 29 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையையும், 13 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையையும் வென்ற இந்திய அணி மே.இ. தீவுகளில் இருந்து நேற்று புறப்பட்டது.

தனி விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி இன்று அதிகாலை தில்லி வந்தடைந்தது. இந்திய அணிக்கு தில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்கள் அனைவரும் நடனம் ஆடியும், கேக் வெட்டியும் வெற்றியைக் கொண்டாடினர்.

இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுடன் ராகுல் டிராவிட், பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி ஆகியோர் உடனிருந்தனர். அங்கு இந்திய அணிக்கு விருந்து வழங்கப்பட்டது. இதன் பிறகு வீரர்கள் அனைவரும் மோடியுடன் கலந்துரையாடினார்கள். இதைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு தில்லி விமான நிலையத்துக்கு சென்றனர்.

தில்லியிலிருந்து மும்பை வந்த இந்திய அணியினர், ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மத்தியில் வாகனப் பேரணியில் சென்றார்கள். கொட்டும் மழையிலும் அலைகடல் போல் ரசிகர்கள் திரண்டனர்.

இந்த வெற்றிப் பேரணி மரைன் டிரைவில் தொடங்கி வான்கடேவில் முடிவடைந்தது.

வான்கடேவுக்கு வந்த இந்திய அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கொண்டாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் கேப்டன் ரோஹித் சர்மா, கோலி, டிராவிட், பும்ரா ஆகியோர் தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்தனர்.

ரோஹித் பேசியதாவது:

“இதுபோன்ற சிறந்த அணியைப் பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த கோப்பையை ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். பிரதமர் மோடியை சந்தித்ததும் சிறந்த அனுபவமாக இருந்தது. மும்பை எங்களை ஒருபோதும் வருத்தமடைய வைத்ததில்லை. எங்களுக்கு சிறப்பான வரவேற்பை மக்கள் கொடுத்துள்ளனர்.

2007-ல் டி20 உலகக் கோப்பையை வென்று, எவ்வாறு உலகக் கோப்பையை வெல்வது என்பதை நாங்கள் உலகிற்கு காண்பித்தோம். 2011-ல் இதே வான்கடேவில் வென்றதும் இந்திய அணிக்கு சிறப்பான தருணமாக அமைந்தது.

ஹார்திக் கடைசி ஓவரை வீசியதற்கு அவரை பாராட்டியே ஆக வேண்டும். அவ்வளவு அழுத்தமான சூழலில் பந்துவீசுவது கடினமான ஒன்று.

சூர்யகுமார் இறுதிச் சுற்றில் சிறப்பான கேட்சை பிடித்ததற்கு அவரின் கடின உழைப்பே காரணம். இதுபோன்ற கேட்சுகளைப் பிடிக்க அவர் நிறைய பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். இது ஏற்கெனவே விதிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். 4 வருடத்திற்கு முன்பாகவே உலகக் கோப்பைக்கான வேலைகளை தொடங்கினோம். இத்தனை ஆண்டுகள் உழைத்ததற்கு கிடைத்தே வெற்றியாகவே நான் இதனை பார்க்கிறேன்.

பொதுவாக நான் எனது உணர்ச்சிகளை அவ்வளவு வெளிப்படுத்த மாட்டேன். ஆனால், கோப்பையை வென்றவுடன் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது. வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் அது”

டிராவிட் பேசியதாவது:

“ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலக நினைத்தேன். ஆனால் எனக்கு போன் செய்த ரோஹித் சர்மா, இன்னும் ஒருமுறை முயற்சி செய்து பார்ப்போம் என்றார். இப்போது, டி20 உலகக் கோப்பையை நாம் வென்றுள்ளோம். என் வாழ்வின் சிறந்த தொலைப்பேசி அழைப்பு அது”.

கோலி பேசியதாவது:

“உலகக் கோப்பை வென்ற பிறகு நானும் ரோஹித் சர்மாவும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டோம். இருவரும் நீண்ட காலமாக இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல மிகவும் ஆவலுடன் இருந்தோம். நிச்சயம் எங்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு தருணம் அது. இச்சமயத்தில் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்த பும்ராவை நான் பாராட்ட விரும்புகிறேன். பல ஆண்டுகளாக அணிக்கு எப்போதும் உதவக்கூடிய ஒரு வீரர் அவர். அதுபோல தான் இந்த உலகக் கோப்பையிலும் தேவைப்பட்ட பல சூழல்களில் அவர் உதவினார். தேசத்தின் மிகப்பெரிய சொத்து அவர். உலகின் 8-வது அதிசயம் என்றும் அவரைக் கூறலாம்.

2011 உலகக் கோப்பையை வென்ற பிறகு அணியில் உள்ள மூத்த வீரர்கள் எதற்கு கண்ணீர் விட்டார்கள் என்று எனக்கு புரியவில்லை, அப்போது எனக்கு 22-23 வயது தான் ஆனது. ஆனால், இப்போது தான் உலகக் கோப்பையை வெல்வது எவ்வளவு உணர்ச்சிவசமான ஒன்று என்பது புரிகிறது. கடந்த 15 ஆண்டுகளாக நானும் ரோஹித்தும் விளையாடி வருகிறோம். முதல்முறையாக அவர் உணர்ச்சிவசப்பட்டு நான் பார்க்கிறேன். அந்த தருணத்தை மறக்க மாட்டேன்” என்றார்.

மேலும், இதில் பேசிய பும்ரா, “என் ஓய்வுக்கு நீண்ட நாள் உள்ளது. இப்போது தான் நான் ஆரம்பித்துள்ளேன்” என்றார்.