இந்திய அணியின் வெற்றிப் பேரணி தொடங்கியது! 
விளையாட்டு

மும்பையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்திய வீரர்கள்!

இந்த வெற்றிப் பேரணி மரைன் டிரைவில் தொடங்கி வான்கடேவில் முடிவடையவுள்ளது.

யோகேஷ் குமார்

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றிப் பேரணி மும்பையில் தொடங்கியது.

பார்படாஸில் கடந்த ஜூன் 29 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையையும், 13 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையையும் வென்ற இந்திய அணி மே.இ. தீவுகளில் இருந்து நேற்று புறப்பட்டது.

தனி விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி இன்று அதிகாலை தில்லி வந்தடைந்தது. இந்திய அணிக்கு தில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்கள் அனைவரும் நடனம் ஆடியும், கேக் வெட்டியும் வெற்றியைக் கொண்டாடினர்.

இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அவர்களுடன் ராகுல் டிராவிட், பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி ஆகியோர் உடனிருந்தனர். அங்கு இந்திய அணிக்கு விருந்து வழங்கப்பட்டது. இதன் பிறகு வீரர்கள் அனைவரும் மோடியுடன் கலந்துரையாடி உள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு தில்லி விமான நிலையத்துக்கு சென்றனர்.

தில்லியிலிருந்து மும்பை வந்த இந்திய அணியின் வெற்றிப் பேரணியை தொடங்கியது. முன்னதாக மழை பெய்தாலும் வீரர்களை காண, கொட்டும் மழையிலும் அலைகடல் போல் ரசிகர்கள் திரண்டனர்.

இந்த வெற்றிப் பேரணி மரைன் டிரைவில் தொடங்கி வான்கடேவில் முடிவடையவுள்ளது. இதை முன்னிட்டு வான்கடேவில் ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மைதானம் நிரம்பியது.

ரசிகர்கள் “ஹார்திக்.. ஹார்திக்..” என்ற கோஷங்களை எழுப்பக் கூடிய காணொளி இணையத்தில் வேகமாக பரவியது. முன்னதாக, கடந்த ஐபிஎல் போட்டியின் போது பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிடுவது போன்ற சம்பவங்கள் நடந்தது.

இந்த வெற்றிப் பேரணி முடிந்தவுடன் வான்கடேவில் கொண்டாட்ட நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.