இங்கிலாந்தில் முதல் டெஸ்டில் முதல் நாளில் அதுவும் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நம்பமுடியாத விதத்தில் அமர்க்களமாக விளையாடி 359/3 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்கு நெருக்கடி தந்துள்ளது. ஜெயிஸ்வாலும் கேப்டன் ஷுப்மன் கில்லும் சதமடித்து அற்புதமான தொடக்கத்தை இந்திய அணிக்கு அளித்துள்ளார்கள்.
சாய் சுதர்சன் அறிமுகம், மீண்டும் கருண் நாயர் என புதிய பேட்டிங் வரிசையுடன் களமிறங்கியது இந்திய அணி. ஆல்ரவுண்டர்களாக ஜடேஜாவும் ஷார்துல் தாக்குரும் அணியில் இடம்பிடிக்க வேகப்பந்துவீச்சு வரிசையில் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா இடம்பெற்றார்கள். இந்த அணி மீது யாருக்கும் பெரிதளவில் மனக்குறை இருக்காது.
ஆடுகளம் பேட்டிங்குக்குச் சற்று சாதகமாக இருந்ததால் ஆரம்பத்திலிருந்தே இந்திய அணி பேட்டர்கள் இங்கிலாந்தின் பந்துவீச்சை நன்குக் கையாண்டார்கள். நிறைய பவுண்டரிகள் அடித்தார்கள். 15 ஓவர்களில் ஜெயிஸ்வால் - ராகுல் கூட்டணி 50 ரன்கள் எடுத்தது. 8 பவுண்டரிகள் அடித்த ராகுல், கார்ஸ் பந்தில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அறிமுக வீரர் சாய் சுதர்சன், லெக் சைடில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். அடுத்தது இரு விக்கெட்டுகளை எடுத்தது இங்கிலாந்து. உணவு இடைவேளையின்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது.
தான் விளையாடும் ஒவ்வொரு நாட்டிலும் முத்திரை பதிக்கும் ஜெயிஸ்வால் இங்கிலாந்திலும் தன் திறமையை நிரூபித்தார். 96 பந்துகளில் அரை சதமெடுத்தவர், 144 பந்துகளில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் சதமடித்தார் ஜெயிஸ்வால். இதன்பிறகு ஸ்டோக்ஸ் பந்தில் போல்ட் ஆனார். 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில்லும் ரிஷப் பந்தும் இங்கிலாந்து பந்துவீச்சை மேலும் வெறுப்பேற்றினார்கள். கடந்த சில வருடங்களாக ஆசியாவுக்கு வெளியே மோசமாக விளையாடி வரும் ஷுப்மன் கில், இன்று தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆரம்பத்திலிருந்து விறுவிறுவென ரன்கள் எடுத்தார். 140 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் சதமடித்தார் கில். பந்த் பொறுப்புடன் விளையாடி 91 பந்துகளில் அரை சதமெடுத்தார். அவ்வப்போது சுழற்பந்து வீச்சாளரை மட்டுமல்ல வேகப்பந்து வீச்சாளர்களின் ஓவர்களிலும் அதிரடியாக விளையாடினார் பந்த்.
முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ஷுப்மன் கில் 127, ரிஷப் பந்த் 65 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.