ANI
விளையாட்டு

ஆடுகளம் குறித்து ஐபிஎல்லிடம் பேசுவேன்: ரஹானே

"ஈடன் கார்டன்ஸ் ஆடுகளப் பராமரிப்பாளருக்கு ஏற்கெனவே நிறைய விளம்பரம் கிடைத்துவிட்டது. கிடைத்த விளம்பரத்தால் அவர் மகிழ்ச்சியடைந்திருப்பார்."

கிழக்கு நியூஸ்

ஈடன் கார்டன்ஸ் ஆடுகளம் குறித்து ஐபிஎல் மற்றும் உரிய அதிகாரிகளிடம் பேசவுள்ளதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2025-ல் நேற்றைய முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் 238 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 234 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஐபிஎல் 2025-ல் இதுவரை 2 வெற்றிகளைப் பெற்று, 3 தோல்விகளைச் சந்தித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

ஈடன் கார்டன்ஸ் ஆடுகளம் குறித்து ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன. இந்நிலையில், லக்னௌவுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரஹானேவிடம் ஆடுகளம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

"ஆடுகளம் குறித்து போதுமான அளவுக்குப் பேசியாகிவிட்டது. நான் எது சொன்னாலும் அது மிகப் பெரிய சர்ச்சையாகும். எங்களுடைய (ஈடன் கார்டன்ஸ்) ஆடுகளப் பராமரிப்பாளருக்கு ஏற்கெனவே நிறைய விளம்பரம் கிடைத்துவிட்டது. கிடைத்த விளம்பரத்தால் அவர் மகிழ்ச்சியடைந்திருப்பார் என நினைக்கிறேன். ஆடுகளம் குறித்து நான் இங்கு எதையும் சொல்லப்போவதில்லை. ஐபிஎல் மற்றும் உரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசுவேன்" என்று ரஹானே பதிலளித்தார்.

முன்னதாக, கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு உதவும் ஆடுகளத்தைப் பார்க்க விரும்புவதாக ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு கேகேஆர் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்தார்.

தான் உள்ள வரை ஈடன் கார்டன்ஸ் ஆடுகளம் மாற்றப்படாது என்று அதன் ஆடுகளப் பராமளிப்பாளர் சுஜன் முகெர்ஜி கூறியதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்குக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பிறகு விளக்கமளித்த சுஜன் முகெர்ஜி, "கேகேஆர் கேட்ட ஆடுகளத்தை நான் ஒருபோதும் மறுத்ததில்லை. நாங்கள் நீண்டகாலமாக நல்ல உறவுடன் இருக்கிறோம். பிசிசிஐ வழிகாட்டுதல்களின்படி ஆடுகளத்தைத் தயாரித்துள்ளேன். என்னைக் குற்றம்சாட்டுபவர்களுக்கு ஒன்றும் தெரியாது" என்றார்.

எனினும், கடந்த வாரம் நடைபெற்ற சன்ரைசர்ஸுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு அனைத்துப் பிரச்னைகளும் சீரானதாகப் புரிந்துகொள்ளப்பட்டது. காரணம், டாஸின்போது ஆடுகளம் குறித்து பேசிய ரஹானே, "ஆடுகளம் உண்மையில் மகிழ்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. எங்களுடைய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும். சொந்த மைதானத்தில் எது தேவையோ அது கிடைக்க வேண்டும்" என்றார் ரஹானே.

இந்நிலையில், மீண்டும் ஆடுகளம் குறித்த கேள்விக்கு, ஐபிஎல்லிடம் பேசுவதாக ரஹானே தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.