இஜாஸ் அஹமது 
விளையாட்டு

வீரர்களுக்கு கல்வியறிவு கிடையாது: சர்ச்சையைக் கிளப்பிய பாக். முன்னாள் வீரர்

யோகேஷ் குமார்

பாகிஸ்தான் முன்னாள் வீரரான இஜாஸ் அஹமது பாகிஸ்தானில் உள்ள குறிப்பிட்ட சமூகம் குறித்து தவறானக் கருத்துக்களைப் பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 2 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணி தான் விளையாடிய 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்று இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இஜாஸ் அஹமது பாகிஸ்தானில் உள்ள பதான் சமூகம் குறித்து தவறானக் கருத்துக்களைப் பேசியுள்ளார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இஜாஸ் அஹமது பேசியதாவது:

“இப்போது இருக்கும் பாகிஸ்தான் அணியை பாருங்கள், அதில் 80% கைபர் பக்துன்க்வா போன்ற தொலைதூர பகுதிகளுக்கு சென்றது. தற்போது ஒரு அணியைத் தேர்வு செய்தால் அதில் 6-8 வீரர்கள் பதான் இனத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் காலையில் எழுந்து தங்களது உறவினர்கள் அல்லது சகோதரர்களுடன் நமாஸுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புவார்கள். அதன் பிறகு தங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல மாட்டார்கள். அவர்களுக்கு கல்வியறிவும் இருக்காது, அதனால்தான் அந்த வீரர்களால் ஆடுகளத்தில் அழுத்தமான சூழல் ஏற்பட்டால், சரியான முடிவுகளை எடுக்க முடியவில்லை” என்றார்.

இந்த கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இஜாஸ் அஹமது பாகிஸ்தான் அணிக்காக 60 டெஸ்ட் மற்றும் 250 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.

முன்னதாக, அர்ஷ்தீப் சிங் மற்றும் சீக்கிய மதத்தைப் பற்றி முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் கேலி செய்யும் வகையில் பேசியது சர்ச்சை ஆன நிலையில், அதற்கு அவர் மன்னிப்பு கேட்டிருந்தார்.