ஐசிசி  ANI
விளையாட்டு

ஆடுகளங்கள் தரம் உயர்த்தப்படவுள்ளன: ஐசிசி

யோகேஷ் குமார்

டி20 உலகக் கோப்பையில் நியூயார்க்கில் பயன்படுத்தப்படும் ஆடுகளங்கள் தரம் உயர்த்தப்படவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 2 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நியூயார்க்கில் நடைபெற்ற இரண்டு ஆட்டங்களில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்களின் தரம் குறைவாக இருந்ததாக ஐசிசி ஒப்புக்கொண்டுள்ளது.

இங்கு நடைபெற்ற இலங்கை - தென்னாப்பிரிக்கா ஆட்டத்தில் இலங்கை அணி 77 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 16.2 ஓவர்களில் இலக்கை எட்டியது. அடுத்ததாக இந்தியா - அயர்லாந்து ஆட்டத்தில் அயர்லாந்து அணி 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த ஆட்டத்தில் பந்தி திடீரென எழுந்து வந்ததால் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பாதியிலேயே வெளியேறினார்.

இந்நிலையில், இந்த ஆட்டங்களில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்கள் தாங்கள் எதிர்பார்தது போல இல்லை என ஐசிசி அறிவித்துள்ளது. நியூயார்க்கில் பயன்படுத்தப்படும் ஆடுகளங்கள் டிராப் இன் முறை ஆடுகளங்கள் ஆகும். 5 மாதத்தில் இது தயார் செய்யப்பட்டது. இங்கு மொத்தம் 4 ஆடுகளங்கள் உள்ளன, இதில் 1 மற்றும் 4-ம் ஆடுகளங்கள் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆடுகளம் மிகவும் ஆபத்தானது எனக் கூறி பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது ஐசிசி.

ஐசிசி கூறியதாவது: “இந்தியா - அயர்லாந்து ஆட்டம் முடிந்தப்பிறகு உலகத்தரம் வாய்ந்த அணி ஒன்று மைதானத்தில் கடுமையாக வேலை செய்து வருகின்றனர். இனி வரும் ஆட்டங்களில் ஆடுகளங்களின் தரத்தை உயர்த்தி சிறந்த ஆடுகளங்களைக் கொடுக்க முயற்சி செய்கிறோம்”.

ஜூன் 9 அன்று நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் உட்பட இனி 6 லீக் ஆட்டங்கள் நியூயார்க்கில் நடைபெறவுள்ளன.