சேப்பாக்கம் மைதானம் (கோப்புப்படம்) 
விளையாட்டு

சென்னையில் டி20 உலகக் கோப்பை?: தகவல் | T20 World Cup | Chennai | Chepauk |

பாகிஸ்தான் தனது ஆட்டங்கள் அனைத்தையும் இலங்கையில் விளையாடுகிறது.

கிழக்கு நியூஸ்

டி20 உலகக் கோப்பையை நடத்த சென்னை உள்பட 5 இடங்களை ஐசிசி இறுதி செய்து வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இறுதிச் சுற்று அஹமதாபாதில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான அட்டவணை அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பொதுவான இடத்தில் விளையாடும் என பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, பாகிஸ்தான் தனது ஆட்டங்கள் அனைத்தையும் இலங்கையில் விளையாடுகிறது. சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் தனது ஆட்டங்கள் அனைத்தையும் துபாயில் விளையாடியது இந்தியா.

நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் போட்டியை நடத்துவதன் அடிப்படையில் நேரடியாகத் தகுதி பெற்றன. இவ்விரு அணிகள் உள்பட மொத்தம் 20 அணிகள் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன.

கடந்த டி20 உலகக் கோப்பையைப் போல, போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவில் 5 அணிகள் இடம்பெறவுள்ளன. இந்தச் சுற்றின் முடிவில் எல்லா பிரிவுகளிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும்.

இந்தச் சுற்றின் முடிவில் எல்லா பிரிவுகளிலிருந்தும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும்.

உலகக் கோப்பையை நடத்த இந்தியாவில் 5 இடங்களையும் இலங்கையில் 3 இடங்களையும் ஐசிசி இறுதி செய்துவைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அஹமதாபாத், தில்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் கொழும்பில் இரு இடங்களும் கண்டியில் ஓர் இடமும் இறுதி செய்து வைக்கப்பட்டுள்ளன.

போட்டியின் முழு அட்டவணை அடுத்த வாரம் வெளியானவுடன், டிக்கெட் விற்பனை குறித்த விவரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

T20 World Cup | T20 World Cup 2026 | India | Srilanka | Chennai | Chepauk Stadium | ICC |