டி20 உலகக் கோப்பை 
விளையாட்டு

இந்திய அணியின் 11 வருட ஐசிசி கோப்பை கனவு நிறைவேறுமா?

கடந்த 10 வருடங்களில் 5 முறை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று தோல்வியடைந்தது இந்திய அணி.

யோகேஷ் குமார்

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இறுதிச் சுற்று நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் 11 வருட ஏக்கம் நிறைவேறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.

முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2-வது அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இறுதிச் சுற்று நாளை நடைபெறவுள்ளது.

இந்திய அணி கடைசியாக 2023 சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. இதன் பிறகு நடைபெற்ற எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் இந்திய அணி வென்றதில்லை. குறிப்பாக, கடந்த 10 வருடங்களில் 5 முறை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று தோல்வியடைந்தது.

2014 டி20 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராகவும், 2017 சாம்பியன்ஸ் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், 2021 மற்றும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முறையே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இந்திய அணி தோல்வியடைந்தது.

தற்போது, 10 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. எனவே இம்முறை இறுதிச் சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்று 11 வருட ஏக்கத்தை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.