விளையாட்டு

இந்தியாவில் காரணமே இல்லாமல் ஓரங்கட்டப்பட்டேன்: 'பிடாக்' பிரசன்னா ஆதங்கம்

"என் மனைவி 4-ம் நிலை ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக நான் பணம் சம்பாதித்தாக வேண்டும்."

கிழக்கு நியூஸ்

இந்தியாவில் தான் காரணமே இல்லாமல் ஓரங்கட்டப்பட்டதாக பிரபல கிரிக்கெட் நிபுணர் 'பிடாக்' பிரசன்னா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான மெல்போர்ன் டெஸ்ட் நேற்று முடிவடைந்தது. இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா பிஜிடி தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. மெல்போர்ன் டெஸ்ட் குறித்து தனது யூடியூப் சேனலில் 'பிடாக்' பிரசன்னா அலசி ஆராய்ந்துப் பேசினார். அப்போது, தான் தென்னாப்பிரிக்காவில் பணியாற்றி வருவது குறித்தும் இந்தியாவில் பணியாற்றாதது குறித்தும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அவர் கூறியதாவது:

"மூன்றாம் நிலை பயிற்சியாளருக்கான தகுதி பெற்றவன், உலகில் எந்தவொரு அனலிஸ்டும் பெறாத 23 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ளவன், தகுதியுடைய நடுவர், ஈசிஇ பொறியாளர், கம்ப்யூடர் அப்லிகேஷன்ஸ் பிரிவில் முதுநிலை டிப்ளமோ பயின்றுள்ளேன், மைக்ரோசாஃப்டால் அங்கீகரிக்கப்பட்ட சாஃப்ட்வேர் டெவலப்பர், மாதம் ரூ. 25 ஆயிரத்துக்கு தேசிய கிரிக்கெட் அகாடெமியில் ஒப்பந்தப் பணிக்காக பெரிய தொகையில் ஊதியம் வாங்கிக் கொண்டிருந்த ஐடி வேலையிலிருந்து விலகினேன், நாட்டுக்காக என்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டுவதற்காக இந்திய ஹாக்கி அணியில் ரூ. 5 ஆயிரத்துக்குப் பணியாற்றினேன்.

ஆனால், எந்தக் காரணமும் இல்லாமல் நான் ஓரங்கட்டப்பட்டேன். நான் இந்திய அணிக்காகப் பணியாற்ற வேண்டும் என யாரும் விரும்பவில்லை. ஐபிஎல் போட்டியில் என்னைப் பணியில் அமர்த்துவதற்கும் யாரும் விரும்பவில்லை. டிஎன்பிஎல் போட்டியிலும் எந்தவொரு பணியிலும் என்னை அமர்த்த யாரும் விரும்பவில்லை.

என் மனைவி 4-ம் நிலை ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டும். இரண்டு குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள். என் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக நான் பணம் சம்பாதித்தாக வேண்டும்.

இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்கா சென்று, மரியாதை கிடைக்கும் இடத்தில் பணியாற்றுவதைவிட எனக்கு வேறு வழியில்லை. இந்தியாவில் நான் யாருக்கும் தேவைப்படவில்லை.

இந்தியாவில் பணியாற்ற எனக்கு விருப்பமில்லை என யாரும் இனி தயவுகூர்ந்து கூற வேண்டாம் எனக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். எந்தக் காரணமும் இல்லாமல் இந்தியாவில் நான் ஓரங்கப்பட்டேன். நான் உணர்ச்சவசப்பட்டிருந்தால், மன்னிக்கவும்.

நான் ஏன் தேவைப்படவில்லை என்பதற்கு ஒரு காரணத்தையாவது கூறுங்கள். நான் திறமையில்லாதவனா? சர்வதேச அணியுடன் இணைந்து என்னால் பணியாற்ற முடியாது என நினைக்கிறீர்களா? அல்லது எந்தவொரு ஐபிஎல் அணியுடனும் இணைந்து என்னால் செயல்பட முடியாது என நினைக்கிறீர்களா? இதற்கானப் பதிலைச் சொல்லுங்கள்" என்றார் 'பிடாக்' பிரசன்னா.