படம்: https://www.instagram.com/natarajan_jayaprakash
விளையாட்டு

எனக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன: நடராஜன்

கிழக்கு நியூஸ்

கிரிக்கெட்டில் தனக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் ஏற்றத்தாழ்வு உணர்வு ஏதும் இதுவரை வந்ததில்லை என்றும் நடராஜன் தெரிவித்துள்ளார்.

சேலத்தைச் சேர்ந்த நடராஜன் 2020-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணிக்காக அறிமுகமானார். இரு நாள்களில் சர்வதேச டி20 ஆட்டத்தில் அறிமுகமானார். இதே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்திலும் விளையாடி டெஸ்டிலும் அறிமுகமானார்.

இந்தியாவுக்காக டி20யில் மொத்தம் 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள நடராஜன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2021 மார்சில் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்குப் பிறகு நடராஜன் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படவில்லை. இவருக்குக் காயம் ஏற்பட 2021 ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார். முழங்கால் காயம் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். பிறகு, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால், 2021 டி20 உலகக் கோப்பைக்கு இவரால் தேர்வாக முடியவில்லை.

2022 ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியும், அதே ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜனால் இடம்பெற முடியவில்லை. இதன்பிறகு, முழங்காலில் மீண்டும் லேசான காயம் ஏற்பட்டது.

இவற்றைக் கடந்து 2024 ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்காக நடராஜன் சிறப்பாகச் செயல்பட்டார். 14 ஆட்டங்களில் விளையாடிய நடராஜன் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இருந்தபோதிலும், இவரால் 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. தற்போது டிஎன்பிஎல் போட்டியில் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் மதுரையில் நிகழ்ச்சியொன்றில் செய்தியாளர்களைச் சந்தித்த நடராஜன், பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

"கிரிக்கெட்டில் எனக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லையென்றால், உங்கள் முன்பு நடராஜனாக வந்து நின்றிருக்க முடியாது. நடுவில் எனக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால், இடையில் சிறிய இடைவெளி ஏற்பட்டது. நடந்து முடிந்த ஐபிஎல் பருவத்தில் சிறப்பாகச் செயல்பட்டேன். என்னுடைய பணியைச் சிறப்பாக செய்து வருகிறேன். நல்லது எப்போது நடக்க வேண்டுமோ, அப்போது நல்லபடியாக நடக்கும்.

கிரிக்கெட்டில் அரசியல், ஏற்றத்தாழ்வு இல்லை. எனக்கு இதுமாதிரியான உணர்வு, சிந்தனை வந்ததில்லை. கிரிக்கெட்டில் நல்லபடியாக விளையாடி வருகிறேன். கடந்த ஐபிஎல் பருவம் எனக்கு நல்லபடியாக அமைந்தது. அனைத்து வீரர்களும் அரவணைத்துச் செல்வதால்தான் உங்கள் முன்பு என்னால் நடராஜனாக வந்து நிற்க முடிகிறது" என்றார் நடராஜன்.

அண்மையில் நடராஜன் ஹிந்தி குறித்து பேசிய காணொளி ஒன்று சர்ச்சையானது. இதுகுறித்தும் அவர் விளக்கமளித்தார். "நான் எப்படி கஷ்டப்பட்டு மேலே வந்தேன் என்றுதான் பேசினேன். ஆனால், அது வேறு மாதிரி புரிந்துகொள்ளப்பட்டது. உத்வேகம் அளிக்க வேண்டும் என்று பேசியது பேறு மாதிரி சென்றடைந்துவிட்டது" என்றார்.