”என் வாழ்வின் மிகச்சிறந்த நாள்களில் ஒன்று. இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்.”
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து, இந்தியாவை அரையிறுதிக்கு நுழையச் செய்த பிறகு, சஞ்சு சாம்சன் உருக்கமாக உதித்த வார்த்தைகள் இவை.
சஞ்சு சாம்சனுக்கு ஒரு நல்ல நேரம் அமையாதா என்று அவருடைய ரசிகர்கள் வேண்டாத நாள் இல்லை. அந்த நாள், டி20 உலகக் கோப்பைப் போட்டியின் முக்கியமான கட்டத்தில் அமைந்துவிட்டது.
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இலக்கை விரட்டியபோது விராட் கோலி இருமுறை 82 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தன. கோலியைப் போலவே 10 ஓவர்களுக்குப் பிறகு நிதானமாகவும் பொறுப்பாகவும் விளையாடி அணியைப் பத்திரமாகக் கரை சேர்த்து கோலியின் சாதனையையும் முறியடித்துள்ளார் சஞ்சு சாம்சன். “கோலி, ரோஹித் சர்மாவைப் பார்த்தே டி20 கிரிக்கெட்டில் இலக்கை ஒழுங்காக விரட்டுவது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டேன் என்றார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமல்ல ஐபிஎல்-லில் கூட வெற்றிகரமாக இலக்கை விரட்டியபோது ஒருமுறை கூட அவர் ஆட்டமிழக்காமல் இருந்ததில்லை. அதேபோல இலக்கை விரட்டியபோது ஒரு சர்வதேச டி20 அரை சதமும் அடித்ததில்லை. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் தான் எல்லாம் கூடி வரவேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது போல.
இதுபோல ஒரு சிறப்பான ஆட்டத்தை நான் வெளிப்படுத்துவேன் என நான் நினைக்கவே இல்லை என்று ஆட்டம் முடிந்தபிறகு சஞ்சு சாம்சன் பேட்டியளித்தபோது அதுவரை அவர் பட்ட கஷ்டங்கள் தான் கண் முன்னே வந்து சென்றன.
2015-ல் 20 வயது இளைஞராக மிகுந்த கனவுகளுடன் ஜிம்பாப்வே எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்துவைத்தார் சஞ்சு சாம்சன். ஆனால் அவர் இந்திய அணியில் மீண்டும் விளையாட 5 வருடங்கள் ஆனது. இந்த 11 வருடங்களில் 60 சர்வதேச டி20 ஆட்டங்களில் மட்டுமே சஞ்சு சாம்சன் விளையாடியுள்ளார். ஓர் ஓப்பிடாகப் பார்த்தால் 2021-ல் சர்வதேச டி20யில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ் இதுவரை 111 டி20 ஆட்டங்களில் விளையாடியதுடன் இந்தியாவின் கேப்டனாகவும் ஆகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் கடந்த 10 வருடங்களாக சஞ்சு சாம்சன் அளவுக்கு வேறு எந்த வீரரும் அதிகமாக விவாதிக்கப்பட்டிருப்பாரா என்று தெரியவில்லை. எப்போதெல்லாம் இந்திய அணிக்குத் அவர் தேர்வாகவில்லையோ அல்லது அணியிலிருந்தும் வாய்ப்புகள் சரியாக வழங்கப்படவில்லையோ அப்போதெல்லாம் அவருடைய ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பொரிந்து தள்ளுவார்கள். 2015-ல் இந்திய டி20 அணியில் அறிமுகமான சஞ்சு சாம்சன், தனது முதல் அரை சதத்தை அடிக்க 7 வருடங்கள் ஆனது. அடுத்த அரை சதம் அடுத்த இரு வருடங்களுக்குப் பிறகுதான் கிடைத்தது. ஆனாலும் அயர்லாந்து, ஜிம்பாப்வேவுடன் தான் அரை சதமடிக்கிறார் என்கிற குற்றச்சாட்டும் கூடவே எழுந்தது. தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கினால்தானே நன்றாக விளையாட முடியும் என்கிற எதிர்வாதமும் அவருடைய ரசிகர்களால் வைக்கப்பட்டது. கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் இந்திய அணியில் மட்டுமல்ல ஐபிஎல் போட்டிகளிலும் வீணடிக்கிறார் என்கிற வலுவான குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக சஞ்சு சாம்சன் மீது இருந்ததென்னவோ உண்மை.
ஐபிஎல் 2024 சஞ்சு சாம்சனுக்கு கோலாகலமாக அமைந்தது. ராஜஸ்தான் கேப்டனாக அந்த ஆண்டு 5 அரை சதங்களுடன் 531 ரன்கள் எடுத்தார் சஞ்சு சாம்சன். இதனால் 2024 டி20 உலகக் கோப்பைக்கு அவர் தேர்வானார். இந்தியா வென்ற அந்த டி20 உலகக் கோப்பையில் அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றிருந்தாலும் முழு வாய்ப்புகளும் ரிஷப் பந்துக்கே அளிக்கப்பட்டன. சஞ்சு சாம்சன் ஓர் ஆட்டத்திலும் விளையாடவில்லை. அதன்பிறகு ஜிம்பாப்வேக்குச் சென்ற முக்கிய வீரர்கள் இடம்பெறாத இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு ஓர் இடம் கிடைத்தது. ஜிம்பாப்வேயில் ஒரு அரை சதம் அடித்தார். ஆனால் இலங்கையில் இருமுறை டக் அவுட் ஆனபிறகு மீண்டும் அழுத்தத்துக்கு ஆளானார் சஞ்சு சாம்சன். இந்தத் தருணத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகிய இருவரும் சஞ்சு சாம்சனைத் தேற்றி ஊக்கமளித்தார்கள். ”உன் திறமையை நாங்கள் அறிவோம். உனக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் அளிப்போம். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நீ சுமாராக விளையாடுகிறாய். கேரளாவில் இதற்காக நன்குப் பயிற்சி எடுத்துக்கொள்” என்று ஒரே குரலில் கூறினார்கள். ”இலங்கைக்கு எதிராக மோசமாக விளையாடியபிறகு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என நினைத்தேன். ஆனாலும் வங்கதேசத் தொடரில் எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. மேலும் நீதான் தொடக்க வீரர் என்றும் உறுதியளித்தார்கள். இதனால் என்னால் சரியாகப் போட்டிக்குத் தயாராக முடிந்தது” என்றார். வங்கதேசத்துக்கு எதிராக தனது முதல் டி20 சதமடித்தை 40 பந்துகளில் அடித்தார் சஞ்சு சாம்சன். அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சுவிட்டார்கள் அவருடைய ரசிகர்கள்.
அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று விளையாடிய டி20 தொடரில் மாயாஜாலம் செய்தார். 4 டி20 ஆட்டங்களில் இரு சதங்கள் அடித்தார். டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்து சதமடித்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையையும் பெற்றார். நடுவரிசை வீரராக விளையாடி வந்த ரோஹித் சர்மா எப்படி 2013-ல் தொடக்க வீரராகக் களமிறங்கி அதிசயங்கள் நிகழ்த்தினாரோ அதேபோல 2024-ல் நம்பமுடியாத மாற்றங்களை ஆடுகளத்தில் வெளிப்படுத்தினார் சஞ்சு சாம்சன். பேட்டிங் வரிசையில் அதுவரை தனக்கென்று நிரந்தரமாக ஓர் இடமில்லாமல் இருந்த சஞ்சு சாம்சன், அழுத்தமாகத் தனக்கான அந்தஸ்தை இந்திய அணியில் ஏற்படுத்திக்கொண்டார்.
இந்திய அணியில் முதல் 5 வருடங்கள் எனக்கு வாய்ப்புகள் கிடைக்காதபோது மக்களின் கருத்துகளால் என் திறமை மீதே எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. ஐபிஎல்லில் நன்றாக விளையாடினாலும் அதேபோல சர்வதேச கிரிக்கெட்டில் ஏன் விளையாட முடிவதில்லை? சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் அளவுக்குத் திறமை இல்லையா என்று எனக்குள் நானே கேள்வி எழுப்பிக்கொண்டே என்று 2024-ல் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்தார் சஞ்சு சாம்சன்.
ஆனால் 2025-ல் பல வேடிக்கை விளையாட்டுகள் நடக்கப் போகின்றன என யாரும் எதிர்பார்க்கவில்லை. 2024-ல் 5 ஆட்டங்களில் 3 சர்வதேச டி20 சதங்கள் அடித்த சஞ்சு சாம்சன், 2025-ல் மீண்டும் சொதப்ப ஆரம்பித்தார். 15 சர்வதேச டி20 ஆட்டங்களில் 1 அரை சதத்துடன் 222 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2024-ல் 180.16 என இருந்த டி20 ஸ்டிரைக் ரேட், 2025-ல் 126.85 எனப் பாதாளத்தில் இறங்கியது. 2025 ஐபிஎல்-லும் அவருக்குச் சரியாக அமையவில்லை. இந்திய அணியில் காட்சிகள் மாற ஆரம்பித்தன.
2025 ஆசியக் கோப்பைக்கு முன்பு சஞ்சு சாம்சனை கீழே இறக்கிவிட்டு அபிஷேக் சர்மாவுடன் ஷுப்மன் கில்லை அனுப்ப முடிவு செய்தது இந்திய அணி. கில்லுக்கு ஓய்வளிக்கப்பட்டபோதுதானே சஞ்சு சாம்சன் இந்திய அணியில் நுழைந்தார். எனவே கில்லுக்குப் பிறகுதான் சஞ்சு சாம்சனுக்கு இடம் என்பதுபோல தேர்வுக்குழுத் தலைவர் அகர்கர் பேசினார். ஆசியக் கோப்பையில் நடுவரிசையில் விளையாட அனுப்பப்பட்டார் சஞ்சு சாம்சன். இந்த முடிவுகளால் சஞ்சு சாம்சன் நிலைகுலைந்திருக்க வேண்டும். ஆனால் தொடக்க வீரராக ஷுப்மன் கில்லும் முத்திரை பதிக்கவில்லை, நடு வரிசையில் சஞ்சு சாம்சனும் சரியாக விளையாடவில்லை. விமர்சனங்கள் அதிகமாக எழுந்ததால் தடாலடியாக இந்திய அணியிலிருந்து ஷுப்மன் கில் நீக்கப்பட்டு மீண்டும் தொடக்க வீரராகப் பார்க்கப்பட்டார் சஞ்சு சாம்சன். ஆனால் இடையில் ஏற்பட்ட இந்த மாற்றங்களால் பழைய சஞ்சு சாம்சனைப் பார்க்க முடியாமல் போனது.
டி20 உலகக் கோப்பைக்கு முன்பு அணியின் பெரிய சுமையாகப் பார்க்கப்பட்டார் சஞ்சு சாம்சன். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 5 ஆட்டங்களிலும் விளையாடி மொத்தமாகவே 46 ரன்கள் தான் எடுத்தார். அவர் ஆட்டமிழந்த விதமும் கவலை கொள்ளச் செய்தது. இதனால் இஷான் கிஷனுக்கு வாய்ப்பளிக்க இந்திய அணி முடிவு செய்தது. ஷுப்மன் கில்லை வெளியேற்றிய பிறகும் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டாரே என அவருடைய ரசிகர்கள் கவலைப்பட்டார்கள்.
டி20 உலகக் கோப்பையிலும் மாற்று தொடக்க வீரராக முதலில் தேர்வானார் சஞ்சு சாம்சன். அணியில் சில வீரர்களால் விளையாட முடியாத சூழல் உண்டானதுபோல மீண்டும் அணிக்குள் நுழைந்தார் சஞ்சு சாம்சன். சென்னையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அதிவேகமாக 24 ரன்கள் அடித்தபோது அனைவராலும் பாராட்டப்பட்டார் சஞ்சு சாம்சன். இப்படியொரு ஆட்டம் அணியின் வெற்றிக்கு மிகவும் உதவும் என்று ஊக்கமளிக்கப்பட்டது. இந்தத் தெம்பில் தான் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடினார் சஞ்சு சாம்சன்.
ஒரே ஆட்டத்தில் அழுத்தமாகத் தன்னுடைய பெயரை வரலாற்றில் பதியவைத்துவிட்டார் சஞ்சு சாம்சன். காலத்துக்குப் பேசப்படும் அவருடைய 97 ரன்கள்.
என் கிரிகெட் வாழ்வில் நிறைய ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருந்தேன். கடவுள் இன்று என்னை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி என்ற சஞ்சு சாம்சன், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டம் முடிந்த பிறகு தரையில் மண்டியிட்டு கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்.
சஞ்சு சாம்சன் பற்றி பேசிய சூர்யகுமார் யாதவ், நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும் என்றார். அது என்னவோ உண்மை தான்.