காபா டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாலும் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் சதத்தால் ஆஸ்திரேலியா வலுவான நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான பிஜிடி தொடரின் மூன்றாவது டெஸ்ட் பிரிஸ்பேனிலுள்ள காபாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் நாள் மழையால் பாதிக்கப்பட 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்தது.
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. முதல் அரைமணி நேரத்தில் விக்கெட் வீழ்த்தி ஆட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற அழுத்தம் இந்தியாவுக்கு இருந்தது.
வழக்கம்போல் அற்புதமாகப் பந்துவீசிய பும்ரா, இரு தொடக்க பேட்டர்களையும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்கச் செய்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த லபுஷேன், நிதிஷ் ரெட்டியிடம் சாதாரணப் பந்தில் ஆட்டமிழந்தார். 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, ஸ்டீவ் ஸ்மித்துடன் டிராவிஸ் ஹெட் இணைந்தார்.
உணவு இடைவேளை வரை இருவரும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்கள். ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்தது.
உணவு இடைவேளைக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. முக்கியமாக, டிராவிஸ் ஹெட் வேகமாக ரன்கள் எடுத்து இந்திய அணியின் திட்டங்களைத் தகர்த்தார். ஸ்டீவ் ஸ்மித் பழைய ஃபார்மை மீட்டெடுக்க, ஹெட் பவுண்டரிகளாக நொறுக்கினார். 71 பந்துகளில் அரை சதம் எடுத்த ஹெட், 115 பந்துகளில் தனது 9-வது டெஸ்ட் சதத்தை எட்டினார்.
தேநீர் இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு, ஸ்டீவ் ஸ்மித்தும் ஹெட்டுடன் இணைந்து ரன் வேகத்தை அதிகரித்தார். ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களுக்கு உதவி இல்லை, பழைய பந்து போன்ற சாதகமான சூழல்களைப் பயன்படுத்தி அதிரடி காட்டினார்கள். குறிப்பாக, இந்தியாவின் 4-வது மற்றும் 5-வது பந்துவீச்சாளர்களான நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஓவர்களில் ரன்கள் கசிந்ததால், ரோஹித் சர்மா நெருக்கடிக்குள்ளானார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்று 2023 மீண்டும் கண்முன் வந்ததைப்போல ஸ்மித் - ஹெட் விளையாடினார்கள்.
2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றில் 76 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியபோது, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இணை 4-வது விக்கெட்டுக்கு 285 ரன்கள் சேர்த்து ஆட்டத்தின் போக்கை தலைகீழாக்கியது. அப்போதும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் இவர்களைப் பிரிக்க திணறினார்கள்.
இன்றும் அதே நிலை தான். 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறிய போது, இருவரும் கூட்டணி அமைத்து 4-வது விக்கெட்டுக்கு 200 ரன்களை கடந்தார்கள். சதத்துக்காக ஏங்கி வந்த ஸ்மித் டெஸ்டில் 33-வது சதத்தை எட்டினார்.
புதிய பந்தைப் பயன்படுத்தத் தொடங்கியதால், பும்ரா பந்துவீச வந்தார். புதிய பந்தில் தனது இரண்டாவது ஓவரிலேயே ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தினார். இவர் 190 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார்.
ஸ்டீவ் ஸ்மித் - டிராவிஸ் ஹெட் இணை 4-வது விக்கெட்டுக்கு 302 பந்துகளில் 241 ரன்கள் சேர்த்தது.
அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் ஓரிரு முறை புல் ஷாட்டுக்கு முயன்று பந்து பேட்டில் சிக்காமல் தடுமாறினார். ஆட்டமிழந்துவிடுவாரோ என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பும்ராவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் விழுந்ததால், 150 ரன்களை கடந்த ஹெட் நெருக்கடியை இந்தியா பக்கம் திருப்ப முயற்சித்தார். பும்ரா பந்தை டிரைவ் செய்ய முயன்று மார்ஷ் ஆட்டமிழந்த ஓவரிலேயே ஹெட்டும் ஆட்டமிழந்தார். இவர் 160 பந்துகளில் 152 ரன்கள் விளாசினார்.
ஆஸ்திரேலியா அதகளப்படுத்தினாலும், இந்திய அணியில் சிறப்பாகப் பந்துவீசிய பும்ராவுக்கு இது 5-வது விக்கெட்.
எனினும், பும்ராவின் ஸ்பெல் முடிந்தவுடன் ஆட்டம் மீண்டும் ஆஸ்திரேலியா கட்டுப்பாட்டுக்குள் சென்றது. அலெக்ஸ் கேரி மற்றும் பேட் கம்மின்ஸ் வேகமாக ரன்கள் எடுத்து விளையாடினார்கள். 7-வது விக்கெட்டுக்கு 55 பந்துகளில் 50 ரன்களை அடைந்தார்கள். இந்த இணை 58 ரன்கள் சேர்த்தபோது, சிராஜிடம் ஆட்டமிழந்தார் கம்மின்ஸ். நாள் முழுக்க காயத்துடன் கடின உழைப்பைப்போட்ட சிராஜுக்கு 22-வது ஓவரில் முதல் விக்கெட் கிடைத்தது.
அடுத்தடுத்த நாள்களில் மழை குறுக்கீடு இருக்கும் என்பதால், ஆஸ்திரேலிய அணி முன்கூட்டியே டிக்ளேர் செய்து இந்தியாவை இன்று ஓரிரு ஓவர்கள் பேட் செய்ய அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பேட் கம்மின்ஸின் திட்டம் வேறாக இருந்தது.
கம்மின்ஸ் விக்கெட்டுக்கு பிறகு இரு ஓவர்கள் வீசப்பட்டன. ஆஸ்திரேலியா 400 ரன்களை எட்டியது.
இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 101 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 405 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாவது பகுதி ஆட்டத்தில் மட்டும் ஆஸ்திரேலியா 171 ரன்கள் குவித்தது.