ANI
விளையாட்டு

கடைசி ஓவரில் கலக்கிய ஹர்ஷித் ராணா: கிளாஸென் சிக்ஸர்களைத் தாண்டி கொல்கத்தா வெற்றி

பேட்டிங்கில் அதிரடி காட்டிய ரஸ்ஸல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

கிழக்கு நியூஸ்

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக கடைசி ஓவரை ஹர்ஷித் ராணா அட்டகாசமாக வீச கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் கொல்கத்தாவில் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

மார்கோ யான்சென் ஓவரில் கொல்கத்தாவின் தொடக்க பேட்டர் ஃபில் சால்ட் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து அதிரடியான தொடக்கத்தைத் தந்தார். ஆனால், இதற்கு அடுத்த பந்திலேயே சுனில் நரைன் ரன் அவுட் ஆனார். நடராஜன் தனது முதல் ஓவரிலேயே ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயரை வீழ்த்தி கொல்கத்தாவின் அதிரடிக்கு வேகத்தடையைப் போட்டார். பவர் பிளேயில் கொல்கத்தா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்தது.

சால்டுடன் இணைந்த ரமண்தீப் சிங் நேரம் எடுத்துக்கொள்ளாமல் ஆரம்பத்திலிருந்தே சிக்ஸர்களை பறக்கவிட்டு ரன் ரேட் நெருக்கடியைக் குறைத்தார். இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 27 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தது. சால்ட் 37 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார்.

இந்தக் கூட்டணி முறிந்தவுடன் ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல் கூட்டணி அமைத்தார்கள். ரிங்குவை வேடிக்கைப் பார்க்க வைத்து, சிக்ஸர்களாக பறக்கவிட்டார் ரஸ்ஸல். 119 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா 180 ரன்களை எடுத்தால் நல்ல இலக்கை நிர்ணயிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஸ்ஸலின் சிக்ஸர்கள் அந்த அணியை 200 ரன்களைக் கடக்கச் செய்தது.

20 பந்துகளில் அரை சதம் அடித்த ரஸ்ஸல், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 64 ரன்கள் விளாசினார்.

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது.

209 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாதுக்கு தொடக்கம் எதிர்பார்த்தபடி அதிரடியாக அமைந்தது. முதல் 5 ஓவர்களில் ஹைதராபாத் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் எடுத்தது. பவர்பிளேயின் கடைசி ஓவரில் மயங்க் அகர்வால் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க பேட்டர் அபிஷேக் சர்மாவும் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

முதலிரு விக்கெட்டுகளுக்கு பிறகு ரன் குவிக்கும் வேகம் சரிந்தது. 10 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 99 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ரன் குவிக்கத் திணறிய ராகுல் திரிபாதியும், எய்டன் மார்கிரமும் குறுகிய இடைவெளியில் ஆட்டமிழந்தார்கள்.

அடுத்து களமிறங்கிய அப்துல் சமதும் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டுக்கு ஏற்ப அதிரடியாக விளையாட திணறினார். கடைசி 4 ஓவர்களில் ஹைதராபாத் வெற்றிக்கு 76 ரன்கள் தேவைப்பட்டன.

ரஸ்ஸல் வீசிய 17-வது ஓவரில் அப்துல் சமத் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து ஆட்டமிழக்க, ஷாபாஸ் அஹமது முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார்.

கடைசி 3 ஓவர்களில் 60 ரன்கள் தேவைப்பட, வருண் சக்ரவர்த்தி வீசிய ஓவரில் கிளாஸென் 2 சிக்ஸர்களையும், ஷாபாஸ் அஹமது 1 சிக்ஸரையும் பறக்கவிட்டார்கள். 19-வது வீசிய ஸ்டார்க் 4 சிக்ஸர்கள் உள்பட 26 ரன்கள் கொடுத்தார். கிளாஸென் 3 சிக்ஸர்களையும், ஷாபாஸ் அஹமது ஒரு சிக்ஸரையும் அடித்தார்கள்.

கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட, ஹர்ஷித் ராணா வீசிய முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார் கிளாஸென். 3-வது பந்தில் ஷாபாஸ் அஹமதை வீழ்த்திய ஹர்ஷித் ராணா, 5-வது பந்தில் கிளாஸெனை வீழ்த்தினார்.

ஷாபாஸ் அஹமது 5 பந்துகளில் 16 ரன்கள் விளாசினார். கிளாஸென் 29 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் அடித்து மிரட்டினார்.

கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட, ஸ்டிரைக்கில் இருந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்தை பேட்டிங்கில் வாங்காமல் தவறவிட்டார்.

20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஹர்ஷித் ராணாவின் சிறப்பான கடைசி ஓவரால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் அதிரடி காட்டிய ரஸ்ஸல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.