ஐபிஎல் 2024-ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஒவ்வொரு அணியும் தங்களின் விடுவிக்கப்பட்ட மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரத்தை வெளியிட்டன. இந்நிலையில் கடைசி நேரத்தில் ஹார்திக் பாண்டியா ஐபிஎல் 2024-ல் மும்பை அணிக்கு விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது.
2015 முதல் 2021-ம் ஆண்டு வரை மும்பை அணிக்காக விளையாடிய பாண்டியா, அந்த அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தார். அதன் பிறகு 2022-ம் ஆண்டில் முதல் முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்ற பாண்டியா குஜராத் அணிக்கு அந்த வருடம் ஐபிஎல் கோப்பையையும் பெற்றுத் தந்தார். கடந்த ஐபிஎல் போட்டியிலும் குஜராத் அணியை இறுதிச்சுற்று வரை அழைத்துச் சென்றார். இந்நிலையில் மும்பை அணிக்கு மாறிய பாண்டியா, அந்த அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் ஐபிஎல் போட்டியில் ஒரு கேப்டனாக ரோஹித் சர்மாவின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. ஒரு ஐபிஎல் கோப்பையையும் பெறாமல் இருந்த மும்பை இந்தியன்ஸுக்கு 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஐந்து வருடங்களிலும் கோப்பைகளைப் பெற்றுத் தந்து சாதனை படைத்தார். ஐபிஎல் போட்டியில் 158 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் 87 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இல்லாத நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவாரா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.