ஐபிஎல் 2025-ல் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என ஹார்திக் பாண்டியா அறிவித்துள்ளார்.
கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓராட்டத்தில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.
ஐபிஎல் 2024-க்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் ஹார்திக் பாண்டியா. இவருடையத் தலைமையில் மும்பை அணி 14 ஆட்டங்களில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. மேலும், கடைசி லீக் ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிராகப் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த பருவத்தில் மட்டும் இதே குற்றத்துக்காக மூன்றாவது முறையாக அபராதம் பெற்ற ஹார்திக் பாண்டியாவுக்கு ஓராட்டத்தில் விளையாடத் தடை மற்றும் ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை சேப்பாக்கத்தில் வரும் 23 அன்று எதிர்கொள்கிறது. தடை காரணமாக இந்த ஆட்டத்தில் ஹார்திக் பாண்டியா விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜஸ்பிரித் பும்ராவும் காயம் காரணமாக ஆரம்பத்தில் சில ஆட்டங்களில் விளையாட மாட்டார்.
எனவே, ஹார்திக் பாண்டியா இல்லாதபட்சத்தில் மும்பை அணியை ரோஹித் சர்மா மீண்டும் வழிநடத்த நேரிடுமா அல்லது இந்திய டி20 அணியை வழிநடத்தி வரும் சூர்யகுமார் யாதவ் மும்பையை வழிநடத்துவாரா என்ற கேள்வி இருந்தது.
மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஹார்திக் பாண்டியா இதுபற்றி கூறியதாவது:
"கடந்தாண்டு நடந்தது என்பது விளையாட்டின் ஒரு பகுதி. அது என்னுடையக் கட்டுப்பாட்டில் இல்லை. கடைசி ஓவரை ஒன்றரை நிமிடம் அல்லது இரு நிமிடங்கள் தாமதமாக வீசியுள்ளோம். அந்த நேரத்தில் இதன் விளைவுகள் குறித்து எனக்குத் தெரியாது.
இது துரதிருஷ்டவசமானது. ஆனால், விதியைப் பின்பற்றியாக வேண்டும். அடுத்த ஐபிஎல் பருவத்தில் இந்த விதி தொடருமா தொடராதா என்பது உயர் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்திய டி20 அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவ் தான் மும்பை அணியை வழிநடத்துவார். டி20யில் நான் இல்லாதபோது அவர்தான் சரியானத் தேர்வாக இருப்பார்" என்றார் ஹார்திக் பாண்டியா.
ஜஸ்பிரித் பும்ரா எப்போது அணிக்குத் திரும்புவார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. குஜராத் டைடன்ஸுக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்திலிருந்து ஹார்திக் பாண்டியா விளையாடுவார்.