கோப்புப்படம் 
விளையாட்டு

கார்ல்சன் விமர்சனத்துக்கு குகேஷ் பதில்

"இந்த ஆட்டம் இரு உலக சாம்பியன்ஷிப் போட்டியாளர்கள் இடையிலான ஆட்டம் மாதிரி இல்லை."

கிழக்கு நியூஸ்

முன்னாள் உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனின் கருத்துகள் தன்னைப் பாதிக்கவில்லை என உலக செஸ் சாம்பியன் குகேஷ் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் டிங் லிரெனை வீழ்த்தி இந்தியாவின் 18 வயது குகேஷ் சாம்பியன் ஆனார். விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற 2-வது இந்தியர் என்கிற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.

குகேஷின் வெற்றிக்கு ஒரு புறம் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், முன்னாள் உலக சாம்பியன்கள் விமர்சனங்களும் வைத்துள்ளார்கள்.

முன்னாள் உலக சாம்பியன் விளாதிமீர் கிராம்னிக், போட்டியின் தரம் குறித்து எக்ஸ் தளத்தில் விமர்சித்தார். டிங் லிரென் செய்த பிழையைக் குழந்தைத்தனமானது என கிராம்னிக் குறிப்பிடுகிறார். மேக்னஸ் கார்ல்சனும் இந்தக் கருத்துக்கு உடன்படும் வகையில் குறிப்பிட்டுள்ளார். "இந்த ஆட்டம் இரு உலக சாம்பியன்ஷிப் போட்டியாளர்கள் இடையிலான ஆட்டம் மாதிரி இல்லை. திறந்தவெளி போட்டியொன்றின் இரண்டாவது அல்லது மூன்றாவது சுற்று ஆட்டத்தைப்போல இருந்தது" என்று கார்ல்சன் கூறுகிறார்.

மேலும், குகேஷை எதிர்த்துப் போட்டியிடப்போவதில்லை என்றும் கார்ல்சன் பேசினார்.

இதுதொடர்பாக பிபிசி வோர்ல்ட் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் குகேஷ் கூறியதாவது:

"கார்ல்சனின் கருத்துகள் என்னைப் பாதிக்கவில்லை. ஆட்டத்தின் தரம் உயர்நிலையில் இல்லை. ஆனால், உலக சாம்பியன்ஷிப் ஆட்டங்கள் வெறும் செஸ் போட்டியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவில்லை. யார் திடமாகவும் வலிமையான மனோபாவத்துடனும் இருக்கிறார்களோ அதுவே உலக சாம்பியன்களை தீர்மானிக்கும். இந்த அம்சங்களைப் பார்க்கும்போது, நான் சிறப்பாகவே வெளிப்பட்டேன்.

முழுக்க முழுக்க செஸ் கோணத்தில் பார்த்தால், நான் எதிர்பார்த்த அளவுக்கு உயர் தரத்தில் இல்லை. ஆனால், எனக்கு இது புதிய அனுபவம். பணிச்சுமையும், அழுத்தமும் வேறாக இருந்தது.

நான் சற்று கவனம் சிதறியதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், முக்கியமானத் தருணங்களில் நான் நன்றாகச் செயல்பட்டேன். அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்றார் குகேஷ்.