குகேஷ் 
விளையாட்டு

உலக சாம்பியன் டிங் லிரனை வீழ்த்துவேன்: குகேஷ் நம்பிக்கை

யோகேஷ் குமார்

உலக சாம்பியன் டிங் லிரனை வீழ்த்துவேன் என கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ் பேசியுள்ளார்.

நடப்பு உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனையை முடிவு செய்வதற்கான 2024 ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயது குகேஷ் இளம் வயதில் வென்று சாதனை படைத்தார். 2014-ல் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு கேண்டிடேட்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் குகேஷ் தான்.

இந்த வெற்றியின் மூலம் அடுத்ததாக உலக செஸ் சாம்பியனுக்கான போட்டியில் நடப்பு உலக சாம்பியன் டிங் லிரனை எதிர்த்து குகேஷ் விளையாடவுள்ளார். இந்நிலையில் இப்போட்டியில் வென்றதைத் தொடர்ந்து இன்று சென்னை வந்தார் குகேஷ்.

சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது. குகேஷ் படிக்கும் வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவிக்க அதிகாலை முதலே விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.

மேலும் அவரின் பெற்றோர்கள், செய்தியாளர்கள் என பலரும் குகேஷுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் அதிகாலை 3 மணிக்கு வந்த குகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து தனது வெற்றி அனுபவம் குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது: “மிகவும் பெருமையாக உள்ளது. ஆரம்பம் முதலே நான் நல்ல நிலையில் இருந்தேன். 7-வது சுற்றில் தோல்வி அடைந்தது கவலையாக இருந்தாலும், அதிலிருந்து வேகமாக மீண்டு வந்தேன். ஆரம்பம் முதலே இப்போட்டியில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. என் பக்கம் அதிர்ஷ்டமும் இருந்தது. செஸ் போட்டிக்கு இவ்வளவு ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த என் பெற்றோர்கள், பயிற்சியாளர், ஆலோசகர் என் அணியினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. என்னுடைய ஆலோசகராக இருந்த விஸ்வநாதன் ஆனந்துக்கு நன்றி. டிங் லிரன் ஒரு சிறந்த வீரர், அவரையும் வீழ்த்துவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு என்னால் முடிந்த முயற்சிகளை செய்வேன். உலக செஸ் சாம்பியனுக்கான போட்டியில் பங்கேற்க ஆவலாக உள்ளேன்” என்றார்.