ANI
விளையாட்டு

ஹர்ஷித் ராணா முன்னாள் தேர்வுக் குழுத் தலைவரின் மகனல்ல: கொதித்த கம்பீர்! | Harshit Rana |

"உங்களுடைய யூடியூப் சேனலை நடத்துவதற்காக எதையாவது சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்."

கிழக்கு நியூஸ்

ஹர்ஷித் ராணாவை யாரும் குறிவைக்க வேண்டாம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், ஹர்ஷித் ராணாவை விமர்சிப்பவர்களை அவர் மிகக் கடுமையாகவும் சாடியுள்ளார்.

இந்திய அணியில் ஹர்ஷித் ராணாவுக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கி வருவது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி வருகிறது. ஆஸ்திரேலிய பயணத்தில் ஒருநாள் மற்றும் டி20 என இரு தொடர்களிலும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்குப் பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

ஹர்ஷித் ராணா தேர்வு குறித்து இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் பேசும்போது, "ஹர்ஷித் ராணா இந்திய அணியில் நிரந்தரமானவர். காரணம், அவர் கௌதம் கம்பீரின் செல்லம் போல தெரிகிறது" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஹர்ஷித் ராணா குறித்த விமர்சனங்களுக்கு கௌதம் கம்பீர் பதிலடி தந்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடருக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"23 வயது வீரரைத் தனிப்பட்ட முறையில் குறிவைப்பது வெட்கத்துக்குரியது. ஹர்ஷித் ராணாவின் தந்தை ஒன்றும், தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவரல்ல.

தனிப்பட்ட ஒருவரைக் குறிவைப்பது நியாயமல்ல. சமூக ஊடகங்களில் ட்ரோ் செய்வது சரியல்ல. மனநிலையை நினைத்துப் பாருங்கள்.

யாருடைய குழந்தையாக இருந்தாலும் கிரிக்கெட் விளையாடலாம். இந்திய கிரிக்கெட் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்கிற தார்மிகப் பொறுப்பு எல்லோருக்கும் உள்ளது. உங்களுடைய யூடியூப் சேனலை நடத்துவதற்காக எதையாவது சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்.

உங்களுக்கு யாரையாவது குறிவைக்க வேண்டுமெனில், என்னைக் குறிவையுங்கள். என்னால் அதைக் கையாள முடியும். ஆனால், அந்தக் குழந்தையை விட்டுவிடுங்கள். இது எல்லா இளம் நட்சத்திரங்களுக்கும் பொருந்தும்" என்றார் கௌதம் கம்பீர்.

அஸ்வினின் யூடியூப் சேனலில், "தேர்வுக் குழுவில் என்ன மாதிரியான விவாதங்கள் நடக்கும் என நினைக்கிறீர்கள். ஹர்ஷித் ராணாவை அணியில் தேர்வு செய்ய 5 அம்சங்கள் முன்வைக்கப்படுகிறது எனில், அந்த 5 அம்சங்கள் என்னவாக இருக்கும்" என நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் அஸ்வினிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அஸ்வின், "ஏன் எடுக்கிறார்கள், எதற்காக எடுக்கிறார்கள் என சத்தியமாகத் தெரியவில்லை. தேர்வுக் குழுவில் அமர்ந்து அந்த 5 அம்சங்கள் என்ன என்பதைக் கேட்க எனக்கும் ஆசை உள்ளது. ஆஸ்திரேலியாவில் பேட்டிங் செய்யக்கூடிய திறமை கொண்ட வேகப்பந்துவீச்சாளர் தேவை என்பது ஓர் அம்சமாக இருக்கலாம். ஹர்ஷித் ராணாவில் பேட்டிங் செய்ய முடியும் என யாரோ நம்புகிறார்கள். அதனால் தான் அவரை 8-வது இடத்தில் விளையாட வைக்கிறார்கள். இரு வருடங்களுக்கு முன்பு ஐபிஎல் இறுதிச் சுற்றில் சேப்பாக்கத்தில் அற்புதமாக ஒரு பந்தை வீசினார். அந்தப் பந்துக்காக சில நாள்கள் அணியில் நீடித்திருக்கலாம்.

அவரிடம் பந்துவீசுவதற்கான திறன் இருக்கிறதா என்றால் நிச்சயம் திறன் உள்ளது. சில சமயம், ஒரு வீரரை மிகவும் நெருக்கமாகப் பார்த்திருக்கலாம். அதில் ஒரு நம்பிக்கை தோன்றும். ஜடேஜா இன்று பயங்கரமான வீரராகத் திகழ்ந்து வந்துகொண்டிருக்கிறார். ஆனால், ஜடேஜாவை எதற்காக அணியில் எடுக்கிறீர்கள் எனக் கேட்டவர்கள் உண்டு. நான் 540 விக்கெட்டுகள் எடுத்துள்ளேன். இருந்தபோதிலும், இவரை (அஸ்வின்) எதற்கு அணியில் எடுக்கிறீர்கள் எனக் கேட்டவர்கள் உண்டு. ஹர்ஷித் ராணாவை இந்த அணியில் எடுப்பது தற்போது சரியா என்றால் 100 சதவீதம் கேள்விக்குறி தான். ஆனால், அவரிடம் ஏதோ ஒரு திறனைப் பார்த்து யாரோ அவரை அணியில் எடுக்கிறார்கள். இது பலன் தருமா இல்லையா என்பது சில சமயத்துக்குப் பிறகு தான் தெரியும்" என்று அஸ்வின் கூறியிருந்தார்.

Harshit Rana | Gautam Gambhir | Team India | India Squad |