கங்குலி ANI
விளையாட்டு

ரோஹித்தை கேப்டனாக்கியது நான் தான் என்பதை மறந்துவிட்டார்கள்: கங்குலி

2021-ல் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோது தான் ரோஹித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றார்.

யோகேஷ் குமார்

ரோஹித்தை கேப்டனாக தேர்வு செய்தபோது நான் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டேன் என்று கங்குலி பேசியுள்ளார்.

பார்படாஸில் கடந்த ஜூன் 29 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

இதன் மூலம் உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன்கள் என்ற பட்டியலில் கபில் தேவ், தோனி ஆகியோருடன் இணைந்தார் ரோஹித் சர்மா.

2021-ல் கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்தபோது தான் ரோஹித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றார். இந்நிலையில் ரோஹித்தை கேப்டனாக்கியது நான் தான் என்பதை மறந்துவிட்டார்கள் என்று கங்குலி பேசியுள்ளார்.

கங்குலி பேசியதாவது:

“ரோஹித்தை கேப்டனாக தேர்வு செய்தபோது நான் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டேன். டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு என்னை யாரும் விமர்சிப்பதில்லை. ரோஹித்தை கேப்டனாக்கியது நான் தான் என்பதையும் மறந்துவிட்டார்கள்” என்றார்.

முன்னதாக, கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியதற்கும் கங்குலி தான் காரணம் என்று தகவல்கள் வெளியான நிலையில், “கோலி கேப்டன் பதவியிலிருந்து விலக நான் காரணம் இல்லை. அவர் டி20 ஆட்டங்களில் கேப்டன் செய்ய விருப்பமில்லாமல் இருந்தார். அதனால், டி20-யில் கேப்டன் செய்ய விருப்பமில்லை என்றால், வெள்ளைப் பந்து கேப்டன் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்றேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.