கங்குலி ANI
விளையாட்டு

ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க சிரமப்பட்டோம்: கங்குலி

“7 மாதங்களில் 2-வது முறையாக உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் ரோஹித் தோல்வியடைய மாட்டார் என நம்புகிறேன்”.

யோகேஷ் குமார்

இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு ரோஹித் சர்மாவை நியமிக்க மிகவும் சிரமப்பட்டதாக பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று இறுதிச் சுற்றில் விளையாடவுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கங்குலி, “ரோஹித் சர்மா கேப்டன் பதிவிக்கு சம்மதிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டார்” என பேசியுள்ளார்.

கங்குலி பேசியதாவது:

“ரோஹித் சர்மாவை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். 6 மாதங்களுக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக கூட அவர் இல்லை, ஆனால் இன்று அவர் தனது அணியை இறுதிச் சுற்றுக்கு அழைத்து வந்துள்ளார். இதுவரை 2 முறை அவர் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் விளையாடி உள்ளார். ஒரு கேப்டனாக அவரின் செயல்பாடு எனக்கு எந்த ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. ஏனென்றால் நான் பதவியில் இருக்கும்போது தான் அவர் கேப்டனாக பொறுப்பேற்றார்.

ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க சிரமப்பட்டோம். அவர் தயார் நிலையில் இல்லாத காரணத்தால், கேப்டன் பதிவிக்கு சம்மதிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டார். அவர் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார், அது மிகப்பெரிய சாதனை. 7 மாதங்களில் 2-வது முறை உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் அவர் தோல்வியடைய மாட்டார் என நம்புகிறேன். மீண்டும் இறுதிச் சுற்றில் தோல்வியடைந்தால் பார்படோஸ் கடலில் அவர் குதித்துவிடுவார்.

கோலி தொடர்ந்து தொடக்க வீரராகவே விளையாட வேண்டும். மனிதர்கள் தோற்பது இயற்கை. சச்சின், டிராவிட், கோலி ஆகிய அனைவரும் இந்திய கிரிக்கெட்டின் தூண்கள். 3-4 ஆட்டங்களில் சரியாக விளையாடவில்லை என்பதால் அவர்கள் பலவீனமானவர்கள் என்று அர்த்தம் இல்லை” என்றார்.