விளையாட்டு

மசாலாக்களுக்கு முடிவு: கோலி - கம்பீர் உரையாடல் வெளியீடு!

யோகேஷ் குமார்

கோலி - கம்பீர் இடையிலான உரையாடல் காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்தியா, வங்கதேசம் இடையிலான இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (செப்டம்பர் 19) தொடங்குகிறது. முதல் டெஸ்ட் சென்னையிலும், இரண்டாவது டெஸ்ட் செப்டம்பர் 27-ல் கான்பூரிலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கோலி - கம்பீர் இருவரும் தங்களின் அனுபவம் குறித்து பேசிய உரையாடலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஆரம்பத்தில், “அனைத்து மசாலாவுக்கும் முடிவு கட்ட இருக்கிறோம்” என்று பேட்டியைத் தொடங்கினார் கோலி.

கம்பீர் பேசியதாவது

இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றுவேன் என்று நினைக்கவில்லை. இதுபோன்ற முடிவுகளை எடுப்பது கடினம். இனி வரும் ஆண்டுகளில் இந்திய அணிக்கு நிறைய சவால்கள் காத்திருக்கிறது, அதற்கு என்னால் முடிந்த பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன். டெஸ்டில் நீங்கள் (கோலி) சாதித்த அனைத்தும் சாதாரணமானது அல்ல. அடுத்த தலைமுறைக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறீர்கள்.

மேலும் உங்கள் தலைமையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் வலிமை அடைந்தனர். டெஸ்டில் ஒரு அணி வெற்றி பெற பந்துவீச்சாளர்கள் மிகவும் முக்கியம், அந்தப் பணியை நீங்கள் சிறப்பாகச் செய்தீர்கள். அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் அவர்களின் வேலையை நேசிக்கிறார்கள். சென்னை போன்ற இடத்தில் 20 ஓவர்களுக்கு மேல் வீசுவது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால் அனைவரும் தங்களின் வேலையை நேசித்து செய்வதால் அது சுலபமாக இருக்கிறது. எப்போதும் தனிப்பட்ட சாதனைகளை குறித்து யோசிக்கக்கூடாது. 2011 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றில் நான் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போது, எதிரணிக்கு ஒரு வாய்ப்பை கொடுத்துவிட்டோமே என எண்ணி வருத்தப்பட்டேன். சதம் அடிக்காதது எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. இன்றைய இளைஞர்கள் இதனை புரிந்துக்கொள்ள வேண்டும்.

கோலி பேசியதாவது

டெஸ்டில் விளையாட வேண்டும் என்பதே எனக்கு மிகப்பெரிய கனவாக இருந்தது. நான் ஒரு கிரிக்கெட் வீரராக வளர்ந்து வந்த காலத்தில் உங்களைப் (கம்பீர்) பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன். நீங்கள் தொட்ட உயரத்தை நானும் அடைய வேண்டும் என எண்ணினேன். தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகும் போது எனக்கு 25 வயது. அந்த சிறுவயதில் எனக்கு கேப்டன் பதவி கிடைக்கும் போது நான் மிகவும் தயங்கினேன். ஆனால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி எந்த நிலைமையில் இருக்க வேண்டும் என்பதை யோசிக்கும் போது அதற்கான விடை எனக்கு கிடைத்தது. ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டுமோ அதனை நான் சரியாக செய்வேன். முடிவுகளைப் பற்றி அதிகம் யோசிக்கக்கூடாது. வெற்றி பெற என்ன வழியோ அதனை மட்டும் யோசிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

முடிவாக, எதிரணி வீரர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதங்கள் குறித்து கோலி கேள்வி எழுப்ப, “நீங்கள் தான் அதிகமான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். நீங்களே அதற்கு பதிலளிக்கலாம்” என்று கம்பீர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவுடன் கலந்துரையாடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

கோலி - கம்பீர் இடையிலான இந்த உரையாடலுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

முன்னதாக, ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி - கம்பீர் இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஐபிஎல்-லில் இருவரும் கைக்குலுக்கி, அரவணைத்து தங்களின் அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். இந்நிலையில் தற்போது இந்த காணொளி மூலம் இருவரும் மனம் திறந்து தங்களின் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.