கம்பீர் @starsports
விளையாட்டு

பயிற்சியாளரான பிறகு அளித்த முதல் பேட்டியில் என்ன சொன்னார் கம்பீர்?

யோகேஷ் குமார்

இந்திய வீரர்கள் அனைவரும் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகையான போட்டிகளுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்று தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக தனது முதல் தொடரில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில், “தனி நபரின் சாதனையைக் காட்டிலும் அணியின் வெற்றியே முக்கியமானது” என்று கம்பீர் பேசியுள்ளார்.

கம்பீர் பேசியதாவது:

“உங்களால் முடிந்தால் நீங்கள் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட வேண்டும். காயம் ஏற்பட்டால், உடனடியாக அதிலிருந்து மீண்டு வரவேண்டும். காயம், பணிச்சுமை போன்ற காரணங்களை நான் வரவேற்பது இல்லை. எந்த ஒரு சிறந்த வீரரும் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்று நினைப்பார். எவருக்கும் ஒரு வடிவிலான போட்டியில் மட்டும் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்காது. தேசத்துக்காக விளையாட குறைந்த காலமே கிடைக்கும் பட்சத்தில், எவ்வளவு முடியுமோ அதிகமாக விளையாட வேண்டும். தனி நபரின் சாதனையைக் காட்டிலும் அணியின் வெற்றியே முக்கியமானது. எப்போது நான் பேட்டை எடுத்தாலும் எனது வேலைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று தான் யோசிப்பேனே தவிர, எவ்வளவு ரன்கள் அடிக்க வேண்டும் என்றெல்லாம் சிந்திக்க மாட்டேன்” என்றார்.