விளையாட்டு

புகழ்பெற்ற நடுவர் 'டிக்கி' பேர்ட் காலமானார்! | Harold Dickie Bird |

15 வயதில் முழங்காலில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை காரணமாக, கால்பந்து கனவு பறிபோனது.

கிழக்கு நியூஸ்

புகழ்பெற்ற கிரிக்கெட் 'டிக்கி' பேர்ட் (92) இன்று காலமானார்.

டிக்கி பேர்ட் ஏப்ரல் 19, 1933-ல் பிறந்தார். விளையாட்டில் வெற்றி பெற கால்பந்து தான் சரியான வழி என பேர்ட் நினைத்தார். ஆனால், 15 வயதில் முழங்காலில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை காரணமாக, கால்பந்து கனவு பறிபோனது.

கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய அவர் பார்ன்ஸ்லே XI கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். இதே அணியில் புகழ்பெற்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் மைக்கேல் பார்கின்சன் மற்றும் பிரபல வீரர் ஜெஃப்ரி பாய்காட் இடம்பெற்றிருந்தார்கள்.

யார்க்‌ஷைர் அணிக்காக 1956-ல் விளையாடத் தொடங்கினார் டிக்கி பேர்ட். 1960-ல் லீசெஸ்டர்ஷைர் அணிக்கு மாறினார். அடுத்த நான்கு ஆண்டுகளில் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 93 முதல் தர ஆட்டங்களில் 20.71 சராசரியில் 3,314 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரு சதங்கள் அடக்கம். மூன்று உலகக் கோப்பை இறுதிச்சுற்று உள்பட 66 டெஸ்ட் மற்றும் 76 ஒருநாள் ஆட்டங்களில் நடுவராக இருந்துள்ளார். இந்தியா வென்ற 1983 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் கள நடுவராக இருந்தவர்களில் ஒருவர் டிக்கி பேர்ட். 2014-ல் யார்க்‌ஷைர் தலைவராகச் செயல்பட்டார்.

இதன் பிறகே, 1970-ல் நடுவராக அவதாரம் எடுத்தார் டிக்கி பேர்ட். அதுவே அவருக்கானப் புகழைத் தேடித் தந்தது. எல்பிடபிள்யு-க்கு பந்துவீச்சாளர்கள் முறையிட்டால், அவுட் கொடுக்க மிகவும் தயக்கம் காட்டுவார். இதன் காரணமாகவே புகழைச் சம்பாதிக்கத் தொடங்கினார். சந்தேகம் இருந்தால், பேட்டர்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்குவதில் கவனமாக இருப்பார்.

சரியான நேரத்துக்கு வந்து செல்ல வேண்டும் என்பதில் மிகவும் பொறுப்பாக இருப்பவர் டிக்கி பேர்ட். ஒருமுறை காலை 11 மணிக்குத் தொடங்கும் ஆட்டத்துக்கு காலை 6 மணிக்கே சென்றடைந்திருக்கிறார். மைதானம் பூட்டப்பட்டிருந்ததால், சுவர் ஏறி குதிக்க முயற்சித்து காவல் துறையினரிடம் பிடிபட்டிருக்கிறார் டிக்கி பேர்ட். இதுபோன்ற சுவாரசியங்களுக்குச் சொந்தக்காரர் தான் டிக்கி பேர்ட்.

1995-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்துக்குப் பயணம் செய்தபோது, ஓல்ட் டிரஃபோர்டில் விளையாடியது. அப்போது, கடுமையான வெயில் காரணமாக, பந்துவீச்சாளரின் கைகளுக்குப் பின்னால், ஜன்னல்கள் வழியாகக் கூடுதல் சூரிய ஒளி எதிரொலித்தது. இதற்காக ஆட்டத்தையே நிறுத்தியது டிக்கி பேர்டின் பிரபலமான முடிவுகளில் ஒன்று.

ஒருமுறை, ஆலன் லேம்ப் மொபைல் ஃபோனுடன் களத்துக்கு வந்துள்ளார். நடுவராக இருந்த டிக்கி பேர்ட், அதை வாங்கி தன்னிடம் வைத்துக்கொண்டார். அப்போது இயான் போத்தம் மொபைல் ஃபோனில் அழைத்துள்ளார். டிக்கி பேர்ட் இதை எடுத்துப் பேசியுள்ளார். அப்போது, ஆலன் லேம்பிடம் கூறுமாறு அணியின் செய்தியை டிக்கி பேர்டிடம் பகிர்ந்துள்ளார். நகைச்சுவைக்காக இயான் போத்தம் மற்றும் ஆலன் லேம்ப் இச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

1996-ல் இங்கிலாந்து - இந்தியா அணிகள் லார்ட்ஸில் மோதிய டெஸ்ட் தான் டிக்கி பேர்ட், நடுவராகப் பணியாற்றிய கடைசி டெஸ்ட். அதில் தான் கங்குலியும் டிராவிடும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்கள். அந்த டெஸ்டில் இரு அணி வீரர்களும் அவருக்கு உரிய மரியாதையை வழங்கினார்கள். கண்ணீர் மல்க களத்துக்கு வந்ததாகப் பேட்டிகளில் குறிப்பிட்டார் டிக்கி பேர்ட்.

Harold Bird | Harold Dickie Bird |