கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதால் தமிழ் ரசிகர்களிடையே நெருக்கம் அதிகம். எம்எஸ் தோனியை தல என்றழைக்கும் ரசிகர்கள் இவரை சின்ன தல எனச் செல்லமாக அழைப்பதுண்டு.
எம்எஸ் தோனி தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக கால் பதித்தார். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் எல்ஜிஎம் எனும் படத்தை தயாரித்தார் எம்எஸ் தோனி. இவருடைய வரிசையில் சுரேஷ் ரெய்னாவும் தற்போது தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். இவர் நடிகராகக் களமிறங்குகிறார்.
தயாரிப்பாளர் சரவண குமாரின் தயாரிப்பு நிறுவன அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்திய வீரரும் சிஎஸ்கேவுக்காக விளையாடும் ஷிவம் துபே தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் இலச்சினையை அறிமுகம் செய்து வைத்தார்.
ட்ரீம் நைட் ஸ்டோரிஸ் (டிகேஎஸ்) எனும் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை லோகன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சுரேஷ் ரெய்னா நடிகராக அறிமுகமாகிறார். ஆம்ஸ்டர்டாமில் விடுமுறையைக் கழித்து வரும் சுரேஷ் ரெய்னா, இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாகக் கலந்துகொண்டார்.
"டிகேஎஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் நல்ல இயக்குநர் இருக்கிறார். இயக்குநர் முதலில் என்னிடம் கதை சொன்னபோது, மிகவும் நெருக்கமாக இருந்தது. கிரிக்கெட் சார்ந்த படம் என்பதால், இது தமிழ்நாட்டிலிருந்து தொடங்க வேண்டும். காரணம், சிஎஸ்கேவுக்காக நிறைய விளையாடியிருக்கிறோம். அவர்கள் நிறைய அன்பும், பாசமும் கொண்டுள்ளார்கள்" என்று ரெய்னா பேசினார்.