படம்: https://x.com/SGanguly99
விளையாட்டு

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாப் சிம்சன் காலமானார் | Bob Simpson

டெஸ்டில் இவர் மொத்தம் 10 சதங்கள் அடித்துள்ளார். அனைத்து சதங்களும் இவர் கேப்டனாக இருந்தபோது வந்தவை.

கிழக்கு நியூஸ்

ஆஸ்திரேலிய முன்னாள் டெஸ்ட் கேப்டனும் முதல் முழு நேர பயிற்சியாளருமான பாப் சிம்சன் (89) காலமானார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான மனிதர் பாப் சிம்சன். 16 வயதிலேயே நியூ சௌத் வேல்ஸ் அணிக்காக அறிமுகமான சிம்சன், முதல் தர கிரிக்கெட்டில் 21,029 ரன்கள் குவித்துள்ளார், 349 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 62 டெஸ்டுகளில் விளையாடி 46.81 சராசரியில் 4,869 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் 50 டெஸ்டுகளில் விளையாடி அதில் 29 டெஸ்டுகளில் அணியை வழிநடத்தி 1968-ல் முதலில் ஓய்வு பெற்றார். பிறகு, உலக சீரிஸ் கிரிக்கெட் பிளவுக்குப் பிறகு1977-ல் மீண்டும் டெஸ்ட் கேப்டனாக திரும்பினார்.

டெஸ்டில் இவர் மொத்தம் 10 சதங்கள் அடித்துள்ளார். அனைத்து சதங்களும் இவர் கேப்டனாக இருந்தபோது வந்தவை. கேப்டன் பொறுப்புக்கு முன்பு ஒரு சதம்கூட அடிக்காமல் 33.67 சராசரியில் விளையாடி வந்த சிம்சன், கேப்டன் பொறுப்புக்குப் பிறகு 54.07 சராசரியில் விளையாடினார். தனது முதல் சதத்தை 30-வது டெஸ்டில் அடைந்த சிம்சன், அதைப் பெரிய ஸ்கோராக மாற்றும் வகையில் 311 ரன்கள் குவித்தார்.

ஓய்வுக்குப் பிறகு 1986-ல் ஆஸ்திரேலிய அணி மோசமான காலகட்டத்தில் இருந்தபோது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் சிம்சன் அழைக்கப்பட்டார். அப்போதைய கேப்டன் ஆலன் பார்டருடன் இணைந்து அணிக்கு ஒழுக்கத்துடன் புத்துணர்ச்சியைப் புகுத்தினார் சிம்சன். 1996 வரை ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருந்தார் சிம்சன்.

இவர் பயிற்சியாளராக இருந்தபோது, ஆஸ்திரேலிய அணி 1987-ல் உலகக் கோப்பையை வென்றது, 1989-ல் ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்றது.

இந்தியாவில் ரஞ்சி கோப்பையில் ராஜஸ்தான் அணியின் ஆலோசகராக இருந்துள்ளார். 1990-களின் பிற்காலத்தில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராகவும் பாப் சிம்சன் இருந்தார்.

Bob Simpson | Australia