விளையாட்டு

ஐபிஎல்: கோலி, டு பிளெஸ்ஸி, சாம் கரனுக்கு அபராதம்

கிழக்கு நியூஸ்

ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்ஸி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று இரு ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸை கொல்கத்தாவில் எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் கடைசிப் பந்து வரை போராடிய பெங்களூரு 1 ரன்னில் தோல்வியடைந்தது.

இந்த ஆட்டத்தில் பந்துவீசுவதற்கு உரிய நேரத்தைவிடக் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதற்காக பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்ஸிக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் பெங்களூரு இந்தத் தவறில் ஈடுபடுவது இதுவே முதன்முறை.

இதே ஆட்டத்தில் ஹர்ஷித் ராணா வீசிய ஃபுல் டாஸ் பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார். பந்து இடுப்பளவு உயரத்துக்கு மேல் வந்ததா என்பதைக் கண்டறிய ரெவ்யூ எடுக்கப்பட்டது. ஆனால், சமீபத்திய தொழில்நுட்பத்தின் உதவியுடன் விராட் கோலி அவுட் என மூன்றாவது நடுவரிடமிருந்து முடிவு வந்தது. இதனால், ஆத்திரமடைந்த விராட் கோலி நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்காக இவருக்கும் ஆட்ட ஊதியத்திலிருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைடன்ஸ் மோதின. இந்த ஆட்டத்தில் நடுவரின் முடிவுக்கு சாம் கரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்காக ஆட்ட ஊதியத்திலிருந்து அவருக்கு 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.