செஸ் உலகக் கோப்பை 2025 இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை செஸ் உலகக் கோப்பை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செஸ் உலகக் கோப்பை 2025-ல் மொத்தம் 206 வீரர்கள் நாக்அவுட் முறையில் போட்டியிடுவார்கள். தோல்வியடையும் வீரர்கள் ஒவ்வொரு சுற்றிலிருந்தும் வெளியேற்றப்படுவார்கள். ஒவ்வொரு சுற்றும் மூன்று நாள்கள் நடைபெறும். முதலிரு நாள்கள் கிளாசிக்கல் ஆட்டங்கள் நடைபெறும். மூன்றாவது நாளில் தேவைப்பட்டால், டை-பிரேக் ஆட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி வீரர்கள் 50 பேர் முதல் சுற்றில் பங்கெடுக்க மாட்டார்கள். தரவரிசையில் 51 முதல் 206-வது இடத்தில் உள்ள வீரர்கள் முதல் சுற்றில் மோதிக் கொள்வார்கள். செஸ் உலகக் கோப்பை 2025-ல் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் 2026 கேன்டிடேட்ஸ் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுவார்கள்.
இந்தியா அண்மைக் காலமாக செஸ் போட்டிகளைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. செஸ் ஒலிம்பியாட் 2022, இளையோர் யு20 உலக சாம்பியன்ஷிப் 2024, மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் 5-வது லெக் (ஏப்ரல் 2025) ஆகியவை இந்தியாவில் நடைபெற்றன. எனவே, செஸ் உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்துவது சரியானதாக இருக்கும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு கருதியுள்ளது.
Chess World Cup | FIDE Chess | International Chess Federation | FIDE World Cup 2025