ஃபாஃப் டு பிளெஸ்ஸி ANI
விளையாட்டு

பந்துவீச்சில் போதிய பலம் இல்லை: தோல்விக்குப் பிறகு ஃபாஃப் டு பிளெஸ்ஸி

யோகேஷ் குமார்

பந்துவீச்சில் எங்கள் அணியில் அந்தளவுக்கு பலமில்லை என ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸி பேசியுள்ளார்.

ஐபிஎல் பருவத்தின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது. 197 ரன்கள் என்ற இலக்கை 27 பந்துகள் மீதமிருந்த நிலையில் மும்பை அணி எட்டியது. ஆர்சிபி அணி 6 ஆட்டங்களில் விளையாடி 5-ல் தோல்வி அடைந்துள்ளது.

இந்த ஆட்டத்திற்கு பிறகு ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸி, “பந்துவீச்சில் நாங்கள் பலமாக இல்லை” என பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது:

“பேட்டிங்கை பொறுத்தவரை 220 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி பெறும் வாய்ப்பிருக்கும் என நினைக்கிறேன். எனவே இனி அதனை செய்ய முயற்சிப்போம். பந்துவீச்சில் நாங்கள் பலமாக இல்லை. எனவே பேட்டர்களே அதிகமான பங்களிப்பை அளிக்க வேண்டியுள்ளது.

பந்துவீச்சில் நிறைய புது யுக்திகளை கையாள விரும்புகிறோம். பவர்பிளேவில் 2 அல்லது 3 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். கடந்த சில ஆட்டங்களில் ஆரம்பம் முதலே பந்துவீச்சில் நாங்கள் பின்தங்கியிருந்தோம் என தோன்றுகிறது.

மும்பை அணியும் எங்களின் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி தந்தது. அவர்கள் கொடுத்த அழுத்தத்தால் நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். அதிகமான ரன்களை வாரி வழங்க ஈரப்பதமும் ஒரு காரணமாக இருந்தது.

எங்கள் அணியில் வேகமாக விக்கெட்டுகள் சரிந்தது. இதன் பிறகு நானும், படிதாரும் இணைந்து நல்ல கூட்டணியை அமைத்தோம். இதன் பிறகு மீண்டும் விக்கெட்டுகள் சரிந்தது, தொடர்ந்து ஒரு நல்ல கூட்டணி அமைந்தது. ஆனால், மும்பை அணியின் ஆட்டம் எந்த தடையும் இன்றி சரளமாக இருந்தது” என்றார்.