யூரோ கோப்பை இறுதிச் சுற்று: இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின்! @EURO2024
விளையாட்டு

யூரோ கோப்பை இறுதிச் சுற்று: இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின்!

யோகேஷ் குமார்

யூரோ கோப்பை இறுதிச் சுற்றில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின் அணி.

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 17-வது யூரோ கால்பந்து போட்டி ஜெர்மனியில் ஜூன் 14 அன்று தொடங்கியது.

ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய அணிகள் 2-1 என்ற கணக்கில் முறையே பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில் ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய அணிகள் இறுதிச் சுற்றில் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதியின் 47-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் வில்லியம்ஸ் அற்புதமான கோலை பதிவு செய்தார். ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

70-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் பால்மர் மாற்று வீரராக வந்து ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் சிறப்பான கோலை அடித்து 1-1 என்று சமம் செய்தார்.

இதன் பிறகு ஓயர்ஸபால் 83-வது நிமிடத்தில் கோல் அடிக்க ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை வகித்தது.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியால் கடைசி வரை மீண்டு வரமுடியாத காரணத்தால் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

முன்னதாக, 2020 யூரோ கோப்பையின் இறுதிச் சுற்றிலும் இங்கிலாந்து அணி தோல்வி கண்டு 2-வது இடத்தைப் பிடித்தது.

ஸ்பெயின் அணிக்கு இது 4-வது யூரோ கோப்பை ஆகும்.

1964, 2008, 2012, 2024 ஆகிய ஆண்டுகளில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன் மூலம் அதிக முறை (4) யூரோ கோப்பையை வென்ற அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது.